தென்னிந்திய சினிமா

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதான‌ நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன்

இரா.வினோத்

ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் (44) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமி (33) என்ற ரசிகரை கடத்தி கொலை செய்ததாக ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே போலீஸார் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக 3991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். ரேணுகா சுவாமியை தர்ஷன் கடுமையாக அடித்து, ஆணுறுப்பை சிதைத்து கொன்றதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தர்ஷனும் பவித்ரா கவுடாவும் ஜாமீன் வழங்கக்கோரி பெங்களூரு மாநகர‌ 57-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தர்ஷன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

முதுகு தண்டு அறுவை சிகிச்சை: இந்த வழக்கு கடந்த 29-ம் தேதி நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தர்ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், ''தர்ஷனுக்கு முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது இரு கால்களும் அடிக்கடி மறுத்து போவதுடன், முதுகு வலியும் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை மேற்கொள்வ‌தற்கு வசதியாக, உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும்''என கோரினார்.

இதையடுத்து நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி, தர்ஷனை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

6 வார கால ஜாமீன்: இந்நிலையில் நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி முன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''தர்ஷனின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சை பெறுவதற்காக 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர் தனது தேவைக்கேற்ற இடத்தில் சிகிச்சை பெறலாம். ஆனால் வழக்கு தொடர்புடைய சாட்சிகளை சந்திக்கவோ, மிரட்டவோ கூடாது'' என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT