இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக ‘புஷ்பா 2’ இருக்க வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு பணிபுரிந்து வருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. டிசம்பர் 5-ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி, தொலைக்காட்சி, இசை உள்ளிட்ட உரிமைகள் முன்பாகவே விற்கப்பட்டு விட்டன. இதர மொழிகள் விநியோகஸ்தர்களை அறிமுகம் செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழி விநியோகஸ்தர்களையும் அறிமுகப்படுத்தியது படக்குழு.
அனைவருமே தங்களுடைய பேச்சில், கண்டிப்பாக பெரிய வசூல் செய்யும் அளவுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்கள். அனைத்து மொழியிலும் முதல் நாள் வசூல் அதிகப்படியாக இருக்கும் என்று கூறினார்கள். இந்தப் பேச்சினை வைத்து பார்த்தால் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படமாக ‘புஷ்பா 2’ இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு இருப்பது தெரிகிறது.
ஏற்கனவே, ‘புஷ்பா’ படத்தின் இந்தி வசூலை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். இப்போது ‘புஷ்பா 2’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கண்டிப்பாக அதனை தாண்டும் என்று கருதுகிறது படக்குழு. ‘புஷ்பா 3’ குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் ரவி ஷங்கர், “’புஷ்பா’ 3-ம் பாகத்துக்கு ஒரு நல்ல முடிவுடன் 2-ம் பாகம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘புஷ்பா 3’ இருப்பது உறுதியாகி இருக்கிறது.