சென்னை: பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ராணா படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார்.
பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றது இப்படம். கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. படம் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி கேராளவில் மட்டும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது நவம்பர் 22-ம் தேதி இந்தியா முழுவதும் படம் வெளியாக உள்ளது.
பட வெளியீடு குறித்து இயக்குநர் பாயல் கபாடியா கூறுகையில், “இந்த படத்தை மெருகேற்ற பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். என்னுடைய படம் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை. படம் குறித்த மக்களின் வரவேற்பை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்றார். நடிகர் - தயாரிப்பாளர் ராணா டகுபதி கூறுகையில், “அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட படங்களை வெளியீடுவதை நோக்கமாக வைத்துள்ளோம். அந்த வகையில் பாயால் கபாடியாவின் இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.