தென்னிந்திய சினிமா

“ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் சமந்தா!” - இயக்குநர் திரிவிக்ரம் புகழாரம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை சமந்தா தான் என்று நினைக்கிறேன்” என இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஆலியாபட் தயாரித்து நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ‘ஜிக்ரா’. இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரொமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், “தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை சமந்தா தான் என்று நினைக்கிறேன். இதை நான் முழு மனதுடன் சொல்கிறேன்.

நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் ஒன்றை உருவாக்க நான் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அண்மையில் மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து அவர் அல்லு அர்ஜூடன் ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்தப் படம் 2026-ல் வெளியாக உள்ளது. திரிவிக்ரம் பேச்சின் மூலம் அல்லு அர்ஜூன் படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT