திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ‘கீரிக்கடன்’ மோகன் ராஜ் காலமானார். அவருக்கு வயது 70.
மோகன்லால் நடித்த பெரும் வெற்றிபெற்ற ‘கிரீடம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ‘கீரிக்கடன்’ மோகன்ராஜ். இப்படத்தில் இவரது ‘கீரிக்கடன் ஜோஸ்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இப்படம் தமிழிலும் அஜித் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் ராஜ், அமலாக்கத்துறை அதிகாரியாகவும், இந்திய ராணுவம், சுங்கத்துறை ஆகியற்றிலும் பணிபுரிந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘கழுகுமலைக் கள்ளன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக மம்மூட்டி நடிப்பில் 2022ல் வெளியான ‘ரோர்ஷாச்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சில காலமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது சொந்த ஊரான விழிஞ்சம் அருகே உள்ள கஞ்சிரம்குளத்தில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகம் 3 மணியளவில் மோகன்ராஜ் உயிரிழந்ததாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தினேஷ் பணிக்கர் தெரிவித்துள்ளார்.
மோகன்ராஜின் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.