தெலுங்கு ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் 13 பிரபலங்கள் மற்றும் பொதுமக்களில் இருந்து 3 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழைப் போன்றே, கடந்த ஆண்டு தெலுங்கிலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதை நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தெலுங்கில் பலத்த வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், தெலுங்கு ‘பிக் பாஸ்’ சீசன் - 2 கடந்த 10-ம் தேதி இரவு தொடங்கியது. இதை இம்முறை ‘நான் ஈ’ புகழ் நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 13 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், பாடகி கீதா மாதுரி, தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் தீப்தி, தீப்தி சுனைனா, சியாமளா, நடிகை தேஜஸ்வி, பானு ஸ்ரீ மெஹ்ரா, நடிகர்கள் தனீஷ், அமித் திவாரி, கிரீடி, கவுஷல் மந்தா, சாம்ராட் ரெட்டி, பாடகர் ரோல் ரிட்டா, எழுத்தாளர் பாபு கோகிநேனி ஆகிய 13 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் பொதுமக்கள் தரப்பில் இருந்து கணேஷ், சஞ்சனா, நூதன் நாயுடு ஆகிய 3 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல என்பதும், ரசிகர்களின் வரவேற்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தமிழில் ‘பிக் பாஸ்’ சீசன் -2 வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த முறைபோல தற்போதும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.