தென்னிந்திய சினிமா

நடிகர் தர்ஷனின் விடுதலைக்காக கன்னட திரையுலகினர் ஹோமம் நடத்தியதற்கு எதிர்ப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழி பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் சீண்டிய ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில்கடந்த ஜூன் 11-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இதனால் தர்ஷனின் குடும்பத்தினரும் ரசிகர்களும் ஜாமீன் கிடைக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தி வருகின்றன‌ர்.

இந்நிலையில் கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்புஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது நடிகர் தர்ஷன் கொலை வழக்கிலிருந்து விடுதலை ஆக வேண்டியும், கன்னட திரையுலகம் வளர்ச்சி அடைய வேண்டியும் சிறப்பு பூஜைசெய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என சமூக ஆர்வலர்களும், நடிகர் சேத்தன் உள்ளிட்டவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT