‘நான் துல்கர் சல்மானுக்கு ரசிகனாகி விட்டேன்’ என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழில் நாளை (வெள்ளிக்கிழமை - மே 11) ரிலீஸாகிறது. ஆனால், தெலுங்கில் நேற்றே (புதன்கிழமை - மே 9) ரிலீஸாகி விட்டது. இந்தப் படத்தைப் பார்த்த பலரும், கீர்த்தி சுரேஷைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். அதில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியும் ஒருவர்.
“இதுவரை நான் பார்த்ததிலேயே, சாவித்ரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போல் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இது சாதாரண இமிட்டேஷன் கிடையாது. மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார். துல்கர் சல்மான் உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் தற்போது அவருடைய ரசிகனாகி விட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்லாமே குறிப்பிடத்தக்கது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என முதலில் அறிவிப்பு வெளியானபோது, ‘அவர் சாவித்ரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்’ என எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தன்னுடைய நடிப்பின் மூலம் அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டார் கீர்த்தி சுரேஷ் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...