தென்னிந்திய சினிமா

ஃபஹத் ஃபாசில் படத்துக்கு எதிராக மனித உரிமை ஆணையம் வழக்கு

செய்திப்பிரிவு

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். படங்களையும் தயாரித்து வருகிறார். வெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தைத் தயாரித்திருந்த அவர், இப்போது சஜின் கோபு, அனஸ்வரா ராஜன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தைத் தயாரித்து வருகிறார். இதை ஸ்ரீஜித் பாபு இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு அங்கமாலி தாலுகா அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. மருத்துவர்கள், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததையும் படமாக்கியுள்ளனர். நடிகர்கள் உட்பட சுமார் 50 பேர் அந்தப் பிரிவுக்குள் இருந்ததால், நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். படப்பிடிப்பின் போது, ​​உடல்நிலை சரியில்லாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் 2 நாள் நடந்த படப்பிடிப்பில் நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து கேரள மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குத் தொடர்ந்துள்ளது. அதோடு, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் படப்பிடிப்புக்கு அனுமதியளித்தது எப்படி என்று விளக்கம் கேட்டு, மாவட்ட மருத்துவ அதிகாரி மற்றும் அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT