தென்னிந்திய சினிமா

தெலங்கானாவில் 10 நாட்களுக்கு ‘சிங்கிள் ஸ்கிரீன்’ தியேட்டர்களை மூட முடிவு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பார்வையாளர்களின் கூட்டம் குறைந்ததால் தெலங்கானாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் மே 17-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமா பெரும் நெருங்கடியில் உள்ளது. அண்மையில் வெளியான எந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவிக்கவில்லை. குறிப்பாக சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு உச்ச நடிகர்களின் படங்களோ, மக்களை கவரும் படங்களோ வெளியாகவில்லை. தெலுங்கில் கவனிக்கப்படும் நடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான ‘ஃபேமிலி ஸ்டார்’ படம் தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் மக்களவைத் தேர்தல் அத்துடன் ஓடிடியின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன் அழுத்தமான படங்களும் வராததால் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வணிக ரீதியாக தாக்குப்பிடித்துக் கொண்டாலும், ஒற்றை திரை கொண்ட தியேட்டர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நிதி நெருங்கடி காரணமாக வரும் 17-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகளை மூட தெலங்கானா திரையரங்குகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 27-ம் தேதி பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல ஆகஸ்ட் 15-ம் தேதி அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ வெளியாகிறது. இந்த இரண்டு படங்கள் தெலுங்கு சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளன.

SCROLL FOR NEXT