தயாரிப்பாளர் சங்கப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்கள் திரையிடுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
மேலும், மார்ச் 16 ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்புகளும், 23 ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸாகி வருகின்றன. பிறமொழிப் படங்களை விரும்புபவர்கள் திரையரங்குகளுக்குச் சென்று இந்தப் படங்களைப் பார்த்து வருகின்றனர். அதேசமயம், ‘பிறமொழிப் படங்களை மட்டும் எப்படி ரிலீஸ் செய்யலாம்?’ என சினிமாத்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.
எனவே, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கத்திடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதற்காக, வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தெலுங்குப் படங்களையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ராம் சரண், சமந்தா நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ போன்ற படங்களும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஓடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.