ஹைதராபாத்: தமிழில், மாஸ்கோவின் காவிரி, வணக்கம் சென்னை உட்பட பல படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், தெலுங்கிலும் நடித்துவருகிறார். தெலுங்கில் 2 படங்களை இயக்கியுள்ள அவர், ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் ராஷ்மிகா மந்தனா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார்.
இந்தப் படம் பற்றி ராகுல் ரவீந்திரன் கூறும்போது, “கேர்ள்ஃபிரண்ட் படத்தின் ஐடியா, சுமார் 10 வருடமாக என் மனதில் இருந்தது. 2020-ம் ஆண்டில் அதை முழுமையாக எழுதி முடித்தேன். சமகாலத்தில் நடக்கும் காதல் கதைதான் படம். இதை இயக்குவதற்காக, நான் நடித்துக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டேன். இந்தியில் ஆலியா பட் தயாரித்து நடிக்கும் ஜிக்ரா படத்தில் நடித்துள்ளேன். அதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது” என்றார்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ‘கேர்ள்ஃபிரண்ட்’ படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் ராஷ்மிகா இதுவரை பணியாற்றவில்லை என்றாலும் அந்த மொழி உட்பட 5 மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார். ராஷ்மிகாவின் பிறந்த நாளான ஏப்.5-ம் தேதி இந்த டீஸர் வெளியாக இருக்கிறது.