தென்னிந்திய சினிமா

போதைப் பொருள் வழக்கு: இயக்குநர் கிரிஷ் தலைமறைவு?

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர், தெலுங்கு இயக்குநர் கிரிஷ். தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த சில நாட்களுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த விருந்தில் நண்பர்களுடன் கலந்துகொண்டார். அங்கு போதைப் பொருள் உட்கொண்டதாக தெலங்கானா மாநில பாஜக தலைவரின் மகன் ஜி.விவேகானந்தா கைது செய்யப்பட்டார். மேலும் அதில் கலந்துகொண்ட நடிகை லிசி கணேஷ், நிவேதா, நீல் உட்பட சிலரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் கிரிஷுக்கும் அவர்கள் சம்மன் அனுப்பினர். இதுபற்றி பேசிய கிரிஷ், அந்த பார்ட்டிக்கு நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஜராகவில்லை. இதுபற்றி மாதப்பூர் மண்டல துணை போலீஸ் கமிஷனர் வினீத் கூறும்போது, “ சில நாட்களுக்கு முன்பு, மருத்துவ பரிசோதனைக்காக கிரிஷை தொடர்பு கொண்டோம். மும்பையில் இருப்பதாகவும், சோதனைக்கு வருவதாகவும் சொன்னார். ஆனால், பிறகு எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதனால் அவரை தலைமறைவு குற்றவாளி என்று ஹைதராபாத் போலீஸார் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT