சென்னை: நடிகர் நானி, மிருணாள் தாக்குர், பேபிகியாரா கன்னா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஹாய் நான்னா’. பான் இந்தியாபடமாக உருவாக்கியுள்ள இதை, வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. படத்தை சவுர்யுவ் இயக்கியுள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். டிச. 7-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் நடிகர் நானி கூறியதாவது:
‘நான்னா' என்றால் தமிழில் அப்பா என்று பொருள். ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரேமாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம். அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாக இருந்தது. படத்தில் அதிக முறை 'நான்னா' என்ற வார்த்தை வருகிறது. அதனால் அதே தலைப்பை மற்ற மொழிகளுக்கும் வைத்துவிட்டோம். இந்தப்படம் எனக்குப் பெருமை தரும் படம். காதல் கதைதான். ஆனால் உங்கள் மனதில்இடம்பிடிக்கும் படமாக இருக்கும்.
நடிகை மிருணாள் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்துள்ளார். 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்துப் பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை. சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும். எனவே நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்கத் தேவையில்லை.
எனக்குப் பிடித்த மிகச் சிறந்த தமிழ் இயக்குநர் எனக்காக ஒரு கதை சொன்னார். விரைவில் அந்தப்படம் பற்றிய அறிவிப்பு வரும். இப்போது தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன். படத்தின் முத்தக்காட்சி பற்றி கேட்கிறார்கள். 2023-ல் முத்தம் பெரிய விஷயம் இல்லை. முன்பு போல் மரத்தைச் சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ரசிகர்களை ஏமாற்ற முடியாது, முத்தத்தைத் திரையில் காட்டலாம், தவறில்லை.
இவ்வாறு நானி கூறினார்