நடிகர் சல்மான் கான் நடித்து கடந்த வாரம் வெளியான 'கிக்' திரைப்படம், அசல் கிக் (தெலுங்கு) படத்தைப் போல் இல்லை. இந்தி தயாரிப்பாளர்கள் கிக் திரைப்படத்தின் பின் உள்ள சிந்தனையை புரிந்துகொள்ளவில்லை என இயக்குநர் சுரேந்தர் ரெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு, இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், ரவி தேஜா நடிப்பில் வெளியான தெலுங்கு படமே கிக். தெலுங்கில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழில், ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்க, 'தில்லாலங்கடி' என ரீமேக் ஆனது. ஆனால், தெலுங்கில் பெற்ற வெற்றி, தமிழில் கிடைக்கவில்லை.
தற்போது, இந்தியில், சஜித் நதியாத்வாலா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து கடந்த வாரம் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், முதல் மூன்று நாட்களில் 83 கோடி ரூபாயை இந்தி 'கிக்' வசூலித்து, சாதனை படைத்துள்ளது.
ஆனால், இந்தி 'கிக்' படத்தைப் பார்த்த, அசல் கிக் படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி, "இந்தப் படம், அசல் கதைக்கும், சல்மான் கானுக்கும் எந்த விதமான நியாயத்தையும் செய்யவில்லை. கதையை ஒழுங்காகப் புரிந்து கொண்டு எடுத்திருந்தால், சல்மானுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும்" என தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.