'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை நிவின் பாலி உறுதி செய்துள்ளார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை நிவின் பாலி தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக தன் முகநூல் பக்கத்தில் நிவின் பாலி கூறுகையில், '' 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் லாலேட்டன் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஒரு முழுமையான நடிகர் எங்கள் படத்தில் நடிப்பதால் ஒட்டுமொத்தக் குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு சிலிர்ப்பான தருணம்'' என்று தெரிவித்துள்ளார்.
'காயம்குளம் கொச்சுண்ணி' 19-ம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த பழம்பெரும் திருடன் ஒருவரைப் பற்றிய படம். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றைத் திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். அவருடைய குழந்தைப் பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தனால் இது போன்ற விஷயங்களில் அவர் ஈடுபடக் காரணம் என்று கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் இவரைப் போன்ற அன்பான , பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல். 1859 கொச்சுண்ணி போலீஸாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறைத் தழுவி 'காயம் கொச்சுண்ணி' என்ற பெயரிலேயே படம் உருவாகி வருகிறது. ’
'உதயநாணு தாரம்', 'மும்பை போலீஸ்', 'ஹவ் ஓல்ட் ஆர் யு' உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். பினோத் பிரதான் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் கோபி சுந்தர் இசை என படக்குழுவினர் பணிபுரிந்து வருகிறார்கள்.