வெகுஜன சினிமா ரசிகர்களிடையே ‘மாஸ்’ படங்களுக்கான தாகம் என்பது என்றும் தணியாதது. அந்த தாகத்தை தீர்க்கும் தண்ணீர் எங்கே கிடைத்தாலும் அதை தேடிப்போய் பருக அவர்கள் எப்போதும் தயராக உள்ளனர். அதன் சமீபத்திய உதாரணம் ‘லியோ’. தமிழகத்தில் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என்றதும் கேரளா, பெங்களூரு என மற்ற மாநிலங்களுக்குச் சென்று 4 மணி ஷோவைப் பார்த்தவர்கள் நம்மவர்கள். இந்த பொழுதுபோக்கு தாகம் மலையாள ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. அதன் பொருட்டே மற்ற மொழி படங்கள் கேரளாவில் வசூலை வாரிக்குவிக்கின்றன. அது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.
முதல் நாள் வசூல்: துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அபிலாஷ் ஜோஷி இயக்கியிருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ் கமர்ஷியல் படமான இதன் முதல் நாள் வசூல் ரூ.6 கோடி. இந்த வருடத்தில் மலையாளத்தில் அதிக ‘ஹைப்’ கொடுக்கப்பட்ட படம் சோபிக்கவில்லை. ஆனால், அதே சமயம் விஜய்யின் ‘லியோ’ கேரளாவில் முதல் நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, மலையாளத்தில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது . மேலும், அதற்கு முன்பு ‘கேஜிஎஃப்’ ரூ.7.30 கோடியுடன் முதல் இடத்தை தக்கவைத்திருந்தது.
முதல் வார வசூல்: அடுத்தபடியாக கேரள பாக்ஸ் ஆஃபீஸில் முதல் வார வசூலில் ரூ.32 கோடியுடன் ‘லியோ’ முதலிடத்திலும், ரூ.26 கோடியுடன் ‘ஜெயிலர்’ இரண்டாவது இடத்திலும், ரூ.24 கோடியுடன் கேஜிஎஃப் 3-ஆவது இடத்திலும் உள்ளது. இதில் பான் இந்தியா முறையில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’ வெறும் ரூ.11 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும், கேரளாவில் ‘லியோ’ படத்துக்கான வரவேற்பு என்பது முதல் நாள் முதலே இருந்துவருகிறது. இதற்கு மற்றொரு காரணம் விஜய்க்கான ஃபேன் பேஸ் அங்கு அதிகம்.
டாப் 10 கேரள பாக்ஸ் ஆஃபீஸ் படங்கள்: இந்தப் பட்டியலில் முதல் 2 இடங்களை மலையாள படங்கள் தக்கவைத்துள்ளன. ‘2018’ திரைப்படம் ரூ.90 கோடியையும், மோகன்லாலின் ‘புலிமுருகன்’ ரூ.85.15 கோடியையும் வசூலித்துள்ளது. அடுத்தடுத்த வரிசையில் ‘பாகுபலி 2’ (ரூ.74 கோடி), ‘கேஜிஎஃப்’ (ரூ.68 கோடி), ‘லூசிஃபர்’ (ரூ.66 கோடி), ‘ஜெயிலர்’, ‘லியோ’ (ரூ.57 கோடி), ‘ஆர்டிஎக்ஸ்’ (ரூ.52 கோடி), ‘பீஷ்மபர்வம்’ (ரூ.47 கோடி). இந்தப் பட்டியலில் ‘2018’ படத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எல்லாமே ‘மாஸ்’ கமர்ஷியல் படங்கள்தான். அதிலும் 4 படங்கள் மற்ற மொழிப்படங்கள்.
மலையாள ‘மாஸ்’ சினிமாக்கள்: நல்ல கமர்ஷியல் சினிமாக்கள் தங்கள் மொழியில் வெளியாகும்போது அதற்கான வரவேற்பை கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். கேரளாவில் முதல் ரூ.100 கோடி க்ளப்பை எட்டியது 2016-ல் வெளியான மோகன்லாலின் ‘புலிமுருகன்’. அடுத்த ரூ.100 கோடி 2019-ல் வெளியான ‘லூசிஃபர்’. தொடர்ந்து மோகன்லாலுடன் போட்டிபோட ‘பீஷ்ம பர்வம்’ படத்தை ரிலீஸ் செய்து ரூ.100 கோடியை தட்டினார் மம்மூட்டி. தற்போது மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ படமும் ரூ.100 கோடி வசூலை எட்டி முன்னேறி வருகிறது. இதில் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஆர்டிஎக்ஸ்’ உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்து கவனம் பெற்றது.
இதில் ‘மாஸ்’ அல்லாத ஒரு படம் கேரள பாக்ஸ் ஆஃபீஸை ரூல் செய்கிறது என்றால் அது ‘2018’ படம் தான். முதன்முறையாக மோகன்லால், மம்மூட்டி இல்லாத ஆக்ஷன் இல்லாத ஒரு மலையாள படம் அனைத்து அந்த மண்ணின் மக்கள் உட்பட அனைவராலும் ‘வசூல்’ குவிக்கப்பட்டது என்றால், அது இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப்பின் வெகுஜன ரசிகர்களை ஈர்த்த திரைக்கதை மந்திரம்.
ஓடிடியும் திரையரங்கும்: மலையாள சினிமா இயக்குநர்கள் உண்மையில் நல்ல கதை சொல்லிகள் என்பதில் மாற்றமில்லை. அவர்களின் திரைப்படங்கள் தரமானவையாக கொண்டாடப்படுகின்றன. ஆனால், அந்தப் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமே ஹிட்டடிக்கின்றன. இந்தப் படங்களை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் யாரும் பெரும்பாலும் அதனை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பது கிடையாது.
ஓடிடி வருகைக்குப் பின்பு அதன் விமர்சனம் மேலோங்கி பாராட்டப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரிய பலன்கிடைப்பதில்லை. இதில் ‘ரோமாஞ்சம்’ மட்டும் தப்பி பிழைத்து திரையரங்கில் வெளியானபோதே விமர்சன ரீதியாக மக்களை தியேட்டருக்கு அழைத்தது. ஆனால், மற்ற படங்களில் அது சாத்தியப்படுவதில்லை. திரையரங்க அனுபவத்தை ‘மாஸ்’ படங்களுக்கானதாக மாற்றி அமைத்திருக்கும் சோகம் கேரளாவையும் விட்டு வைக்கவில்லை. இதற்கு உதாணரம்தான் கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் மற்ற மொழி வெகுஜன திரைப்படங்கள் கொடுக்கும் பாக்ஸ் ஆஃபீஸ் எண்கள்.