மம்மூட்டியின் கசபா திரைப்படம் பெண்விரோதப் படம் என்று நடிகை பார்வதி விமர்சனம் வைத்ததையடுத்து பார்வதி மீது வசை மழை பொழியப்பட்டது. சமூக வலைத்தளம், இணையம் என்று பார்வதியைக் குறிவைத்து கடும் வசைமாரி பொழியப்பட்டது.
இதனையடுத்து மம்மூட்டி மனோரமா ஆன்லைனில் கூறும்போது, “நான் சர்ச்சைகள் பின்னால் செல்வதில்லை. நமக்குத் தேவை அர்த்தமுள்ள விவாதங்கள். என் சார்பாக பதிலளிக்கக் கோரியோ, என்னைப் பாதுகாக்கக் கோரியோ நான் யாரையும் நியமிக்கவில்லை.
பேச்சுரிமை எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கிய கருத்துச் சுதந்திரம். இந்தச் சர்ச்சை எழுந்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்தப் பிரச்சினை குறித்து பார்வதி எனக்கு தகவல் அனுப்பினார், நான் இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அவரிடம் கூறினேன்” என்றார்.
இணையத்தில் பார்வதி மீது இடைவிடாது வசைமாரி எழுந்ததையடுத்து பார்வதி எர்ணாக்குளம் போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து பிரிட்ண்டோ என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்.
கேரள சர்வதேசத் திரைப்பட விழாவின் போது பெண்விரோதம் மற்றும் வன்முறையை திரையில் கொண்டாடக் கூடாது என்று கசபா படம் குறித்து தன் விமர்சனத்தை முன் வைத்தார். இதனையடுத்து இவர் மீது பலரும் வசைமாரி பொழிந்தனர். இதற்கு மம்மூட்டி விளக்கம் அளித்துள்ளார்.