நடிகர் மம்முட்டி கசபா படம் குறித்து நடிகை பார்வதி தெரிவித்த கருத்தால் மலையாள திரையுலகில் எழுந்த சர்ச்சை தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது.
மலையாள நடிகர் மம்முட்டி நடித்த கசபா திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளிவந்தது.
இந்த திரைப்படம் பற்றி கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பார்வதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, "கசாமா படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். முன்னணி நடிகர் ஒருவர் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசும் வசனங்கள் இடப்பெற்றுள்ளதை கண்டு நான் ஏமாற்றமடைந்தேன். வருத்தமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
பார்வதியின் இந்தப் பேச்சை விமர்சித்து மம்முட்டி ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளையிட்டனர்.
இதற்கு பார்வதி ட்விட்டரில், "சினிமா சமூகத்தின் அனைத்து அம்சங்களையும், அனைத்து மனிதர்களையும் பிரதிபலிக்கிறது. நன்மை, தீமை என அனைத்தும். ஆனால் அநியாயத்தையும், வன்முறையும் மாஸ் என்று கூறுவதை என்னால் பாராட்ட முடியாது” என்று கூறினார்.
கீத்து மோகன் தாஸ் உட்பட மலையாள திரைப்பட நடிகைகள் பலரும் பார்வதிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் கசபா திரைப்பட தயாரிப்பாளர் ஜார்ஜ் பார்வதி, கீத்து மோகன் தாஸின் வயதை விமர்சித்து தனது முகப்புத்தக்கத்தில் பதிவிட்ட பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.