தெலுங்கில் அஞ்சலி நடிப்பில் தயாராகி வரும் 'கீதாஞ்சலி' படம் விரைவில் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக கதாசிரியர் கோனா வெங்கட் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி, பிரம்மானந்தம், ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'கீதாஞ்சலி'. கோனா வெங்கட் எழுத, இப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்கிரண். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி தயாராகி வரும் பேய் காமெடி படம். இப்படத்தில் அஞ்சலி வேடத்தில் விரைவில் இந்தியின் முன்னணி நடிகை நடிக்க ரீமேக்காக இருப்பதாக கோனா வெங்கட் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
"நல்ல நேரம் அமைந்து விட்டால், நல்ல மக்கள் நமது வாழ்வில் வருவார்கள். இந்தியில் முன்னணி நாயகி ஒருவர் 'கீதாஞ்சலி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். எனது 'கீதாஞ்சலி' படத்தை தில் ராஜூ அவரது நிறுவனம் மூலம் நிஸாம் மற்றும் வைசாக் ஏரியாக்களில் வெளியிட இருக்கிறார். அவருக்கு முன்பே இப்படத்தின் கதை தெரியும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும்" என்று கோனா வெங்கட் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.