கொச்சி: ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் மே 5-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘2018’. டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹிட்டான இந்தப் படம், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து ஜூட் ஆண்டனி ஜோசப் லைகா நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியா படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில், விக்ரம், விஜய்சேதுபதி, நிவின் பாலி, சுதீப், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.