தென்னிந்திய சினிமா

கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா

செய்திப்பிரிவு

தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ். இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர். அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT