திருவனந்தபுரம்: மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படங்களுக்குப் பிறகு த்ரிஷா பிசியாகி இருக்கிறார். விஜய் நடிக்கும் ‘லியோ’வில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர், சிரஞ்சீவி ஜோடியாக தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்போது மலையாளப் படத்தில் நடிக்க இருக்கிறார்.
'ஃபாரன்சிக்' படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரும் இணைந்து அடுத்து இயக்கும் படம், 'ஐடென்டிட்டி'. இதில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதை டோவினோ தாமஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஒருவர் பணிபுரிய இருக்கிறார்.
இந்தப் படத்தில் முதலில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக த்ரிஷா இணைந்துள்ளார்.
20 வருடத்துக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும், த்ரிஷா, இதுவரை ‘ஹேய் ஜூட்’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அவர் மோகன்லால் ஜோடியாக நடித்த ‘ராம்’ என்ற மலையாளப் படம் என்னவானது என்று தெரியவில்லை.