தென்னிந்திய சினிமா

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளருக்கு சுதீப் நோட்டீஸ்!

செய்திப்பிரிவு

பெங்களூரு: கன்னட நடிகரான சுதீப், தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவனப்புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ பான் இந்தியா படமாக தமிழிலும் வெளியானது. இவர் மீது கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் எம்.என்.குமார் கடந்த சில நாட்களுக்கு முன், பரபரப்பு புகார் கூறியிருந்தார். சுதீப் நடித்த, ‘ரங்கா எஸ்.எஸ்.எல்.சி’, ‘காசி ஃபிரம் வில்லேஜ்’, ‘மானிக்யா’, ‘முகுந்தா முராரி’ படங்களைத் தயாரித்தவர் இவர்.

“8 வருடத்துக்கு முன், நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க சுதீப்புக்கு, ரு.9 கோடி கொடுத்தேன். ஒவ்வொரு படம் முடிந்ததும் அடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருகிறார். இப்போது போனையும் எடுப்பதில்லை. அவர்மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர் எம்.என்.குமாருக்கு நடிகர் சுதீப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “ என் மீது பொய்யான, சட்டவிரோத குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளீர்கள். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இழிவுபடுத்தும் வகையிலும் இதை செய்துள்ளீர்கள்.

இதற்காக எனக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும். அதோடு பொது மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவதூறு வழக்குத் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT