பெங்களூரு: கன்னட குணசித்திர நடிகை அனு கவுடா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் இவர், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கஸ்படி கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோரை அவ்வப்போது சந்திக்கச் செல்வது வழக்கம். அங்கு அவருக்கு விவசாய நிலமும் வீடும் உள்ளது. வீட்டின் அருகில் உள்ள நீலம்மா, மோகன் ஆகியோருக்கும் அவருக்கும் நிலத் தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கஸ்படி கிராமத்துக்குச் சென்ற அனு கவுடாவுக்கும் அவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றி, அனுகவுடாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர், சாகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.