தென்னிந்திய சினிமா

போதை பொருள் பிரச்சினையில் தொடர்பா? - நடிகை சுரேகா வாணி விளக்கம்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி, கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 90 பாக்கெட் ‘கொக்கைன்’ பறிமுதல் செய்யப்பட்டது. அவர் போதைப் பொருள் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகைகள் ஜோதி, சுரேகாவாணி, அஷு ரெட்டி உட்பட 12 திரைபிரபலங்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதில், அஷுரெட்டி, 100 முறைக்கு மேல் சவுத்ரியுடன் போனில் பேசியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகை சுரேகா வாணி, பார்ட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சவுத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போதைப் பொருள் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருக்கும் என்றும் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், சுரேகா வாணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

“சவுத்ரியை, தயாரிப்பாளர் என்ற முறையில் தெரியும். மற்றபடி போதை வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் என்னையும் என் மகளையும் இழுக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். நடிகை ஜோதியும் மறுத்துள்ளார்.

நடிகை சுரேகா வாணிதமிழில், காதலில் சொதப்புவது எப்படி? ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT