மற்றவை

இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிரான புகார்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் அனிருத் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வது குறித்து காவல் துறையினர் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

இசையமைப்பாளர் அனிருத்தின் இசை வீடியோ படம் ஒன்று யூ டியூப்பில் வெளியாகி உள்ளது. பெண்களை ஆபாசமாகவும், மிகவும் இழிவுபடுத்தும் வகையிலும் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உரிய தணிக்கைச் சான்றிதழ் எதுவும் பெறாமல் அவர் இதனை வெளியிட்டுள்ளது குற்றமாகும்.

ஆகவே, அனிருத் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனது புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மனுதாரரின் புகார் மனுவை காவல் துறையினர் பரிசீலித்து, வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT