மற்றவை

“மலைத்துப் போய் நிற்கிறேன்!” - ‘பிக் பாஸ்’ வின்னர் முத்துக்குமரன் உருக்கம்

ப்ரியா

‘பிக் பாஸ் போட்டியில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை முத்துக்குமரன் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது. இதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையுடன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைவரும் சேர்ந்து இந்த வெற்றிக் கோப்பையை என் கையில் தூக்கி கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப கனமாக இருக்கிறது. அவ்வளவு அன்பு. உள்ளே நண்பர்கள் வரும்போது வெளியே உங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு என்று சொன்னார்கள். அப்போது எல்லாம் நம்பவில்லை. ஆனால், வெளியே வந்து பார்க்கும்போது அவ்வளவு வியப்பாக இருக்கிறது.

நிஜமாவே எனக்கா, இவ்வளவு அன்பு எனக்கா, என் உழைப்புக்கு இவ்வளவு அன்பு கிடைக்குமா என வியப்பாக இருக்கிறது. மலைத்துப் போய் நிற்கிறேன். எப்படி நன்றி சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். தெரியவில்லை. சரி... நன்றியை நன்றியாகவே சொல்லிவிடலாமே என்று தோன்றியது.
இந்தக் கோப்பை முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பித்து பேசுங்கள் என்று சொன்னார்கள். அப்போது பேசியதை மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் என் நன்றியை சொல்வதற்கும் சரி என நினைக்கிறேன்.

இந்த மக்களின் அன்பும் அங்கீகரமுமான கோப்பையை மிக நிச்சயமாக எனது நேர்மையாலும், உண்மையாலும் நான் நானாக இருப்பதாலும் காப்பாற்றிக் கொள்வேன். இது என் உழைப்பின் மீது சத்தியம். அனைவரும் நெஞ்சம் நிறைந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார் முத்துக்குமரன்.

இறுதியில் கடுமையான போட்டிகளுக்குப் பிறகு முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், ரயான் ஆகியோர் ஃபைனலுக்கு தேர்வாகினர். அவர்களில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். 2-வது இடத்துக்கு சவுந்தர்யா தேர்வானார். விஷால், பவித்ரா, ராயன் ஆகியோருக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைத்தன. பிக் பாஸ் டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

நன்றி உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி ❤️

SCROLL FOR NEXT