சென்னை: சன் டிவியில் வெளியான ‘அழகி’, ‘திருமகள்’, ஜீ தமிழில் வெளியான ‘நிறம் மாறாதப் பூக்கள்’ உட்பட சில தொடர்களை இயக்கியவர் இனியன் தினேஷ். இவர் இப்போது இயக்கியுள்ள தொடர் ‘ரஞ்சிதமே’. கலைஞர் தொலைக்காட்சியில் ஜூலை முதல் வாரம் வெளியாக இருக்கும் இந்த தொடரில் ரூபா, ராம்ஸ், சதீஷ், மனீஷா உட்பட பலர் நடிக்கின்றனர். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் தொடர் பற்றி இனியன் தினேஷ் கூறியதாவது:
இது நான் இயக்கும் ஐந்தாவது தொடர். இதுவும் குடும்பப் பின்னணியில் நடக்கும் கதை. மகன் மீது அதிக பாசம் கொண்ட அம்மா. அவனுக்குத் திருமணமாகிவிட்டால், தன்னை விட்டுப் பிரிந்துவிடுவானோ என்று பயப்படுகிறார். இன்னொரு புறம், அக்கா கணவரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நாயகி சென்னை வருகிறார். அங்கு நாயகன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் காதல், மகிழ்ச்சி, குடும்பச் சிக்கல்கள்தான் கதை. யதார்த்தமாக படமாக்கி இருக்கிறோம். ஏற்கெனவே வருகிற தொடர்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு இனியன் தினேஷ் கூறினார்.