ஹாலிவுட்

விட்னஸ் ஃபார் தி பிராசிக்யூஷன் (1957): ‘கிளைமாக்ஸை சொல்லிவிடாதீர்கள்’ | ஹாலிவுட் மேட்னி 50

ராம்குமார் சுப்பாராமன்

நீதிமன்றத்தையும் வழக்கறிஞரையும் ஏமாற்றி தன் கணவனைக் காப்பாற்றிய பெண், இறுதியில் கணவனே தனக்குத் துரோகம் இழைத்ததை அறிந்ததும் என்ன முடிவு எடுக்கிறாள் என்பது விட்னஸ் ஃபார் தி பிராசிக்யூஷன் (WITNESS FOR THE PROSECUTION 1957) திரைப்படத்தின் ஒருவரி கதை.

பரபரப்பான லண்டன் சாலைகளில் கார் பயணிக்கிறது. தீவிர இதய நோய்க்காக சிகிச்சை பெற்றுத் திரும்பும் புகழ்பெற்ற பாரிஸ்டர் சர் வில்ஃப்ரிட் ராபர்ட்ஸ், தனது தனிப்பட்ட செவிலியர் மிஸ் பிளிம்சாலுடன் அலுவலகத்துக்கு வருகிறார். வில்ஃப்ரிட் மது அருந்தக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது, மன அழுத்தம் தரக்கூடிய குற்ற வழக்குகளைக் கையாளக் கூடாது என்பது மருத்துவர்களின் நிபந்தனை. ஆனால், இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் செய்யத் தூண்டும் விதமாக ஒரு வழக்கு அவரைத் தேடி வருகிறது!

வழக்கறிஞர் மேஹியூ, லியோனார்ட் வோல் என்பவரை அழைத்து வருகிறார். வசதி படைத்த கணவனை இழந்த எமிலி ஃப்ரெஞ்ச் என்பவரை அவரது வீட்டில் லியோனார்ட் அடித்துக் கொன்றதாக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. உடல்நிலையைக் கருதி அந்த வழக்கை ஏற்க மறுக்கும் சர் வில்ஃப்ரிட், மேஹியூவின் பாக்கெட்டில் இருக்கும் சுருட்டுகளைப் பார்த்ததும் மனம் மாறி, வழக்கை ஏற்கிறார்.

கொலை நடந்த நேரத்தில் மனைவியுடன் வீட்டில் இருந்ததாக லியோனார்ட் கூறுகிறான். எமிலியைத் தொப்பிக் கடையில் சந்தித்தது, பின்னர் திரையரங்கில் நட்பாகி தேநீர் அருந்தியது என அவர்களது அறிமுகத்தை விவரிக்கிறான். ஆனால், எமிலி தனது 80 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துகளை லியோனார்ட்டுக்கு உயிலாக எழுதி வைத்திருப்பது தெரியவர, பணத்துக்காகவே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

நீதிமன்ற விசாரணையில் எமிலியின் வீட்டு வேலைக்காரி ஜேனட், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் சாட்சியம் அளிக்கிறார்கள். அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக, லியோனார்ட்டின் மனைவி கிறிஸ்டின், கொலை நடந்த இரவு அவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததாகவும், சட்டையில் ரத்தக்கறை இருந்ததாகவும், கொலையைத் தன்னிடம் ஒப்புக்கொண்டதாகவும் சாட்சியமளிக்கிறாள். இதைக் கேட்டு சர் வில்ஃப்ரிட் நிலைகுலைந்து போகிறார். இறுதி விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அன்று மாலை ஒரு மர்மப் பெண் சர் வில்ஃப்ரிட்டைத் தொடர்புகொண்டு, கிறிஸ்டின் ‘மேக்ஸ்’ என்பவருக்கு எழுதிய ரகசியக் கடிதங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறாள். யூஸ்டன் ரயில் நிலையத்தில் அவளைச் சந்தித்து கடிதங்களை வாங்கும் சர் வில்ஃப்ரிட், மறுநாள் நீதிமன்றத்தில் அவற்றை ஆதாரமாக முன்வைக்கிறார். அவற்றில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் கணவனை சாட்சியம் மூலம் மாட்டிவிட்டு தாங்கள் இருவரும் சுதந்திரமாக வாழ கிறிஸ்டினும் மேக்ஸும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

கிறிஸ்டின், “நான் நீல நிறத் தாளில்தான் கடிதம் எழுதுவேன்; இது போலியானது” என்கிறாள். அப்போது சர் வில்ஃப்ரிட், தான் வாசித்தது டெய்லர் எழுதிக் கொடுத்த ரசீது என்றும், நீல நிறத் தாளில் எழுதப்பட்ட கிறிஸ்டினின் உண்மையான கடிதங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி அவற்றை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்டினின் பொய் சாட்சியம் அம்பலமாகிறது. லியோனார்ட் குற்றமற்றவர் என நடுவர் மன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்து விடுதலை செய்கிறது.

நீதிமன்றம் கலைந்த பிறகு கிறிஸ்டின், ‘மேக்ஸ்’ என்ற காதலனே தனக்கு இல்லை என்றும், கடிதங்களைத் தானே உருவாக்கி, மாறுவேடமிட்டு வந்து சர் வில்ஃப்ரிட்டிடம் விற்றதாகவும் கூறுகிறாள். ஒரு மனைவி வழங்கும் அலிபியை நீதிமன்றம் நம்பாது என்று சர் வில்ஃப்ரிட் கூறியதால், கணவனுக்கு எதிராகச் சாட்சியமளித்து தன்னைப் பொய்யர் என நிரூபிப்பதன் மூலம் லியோனார்ட்டைக் காப்பாற்றியதாக அவள் விளக்குகிறாள். நீதிமன்றத்தையும் தன்னையும் அந்தப் பெண் ஏமாற்றிய விதம் அறிந்து சர் வில்ஃப்ரிட் அதிர்ச்சியடைகிறார்.

ஆனால், அடுத்த கணமே கிறிஸ்டினுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறான் லியோனார்ட். தான் செய்த மாபெரும் தியாகத்துக்குப் பதிலாகக் கணவனே துரோகம் இழைத்ததை அவள் நேரில் பார்க்கிறாள். அப்போது கிறிஸ்டின் எடுக்கும் அதிரடி முடிவுதான் படத்தின் அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ். "இப்படத்தின் இறுதிக் காட்சியை யாரிடமும் வெளிப்படுத்தி விடாதீர்கள்" என்ற கோரிக்கையுடன் படம் நிறைவடைகிறது.

அகதா கிறிஸ்டியின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, டார்க் ஹியூமர், கூர்மையான வசனங்கள், விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகளுடன் பில்லி வைல்டர் மற்றும் ஹாரி குர்னிட்ஸ் அமைத்த திரைக்கதை, மர்மத்தை இறுதிவரை தக்க வைக்கிறது. பில்லி வைல்டரின் இயக்கத் திறமை அகதா கிறிஸ்டியின் படைப்புகளில் மிகச் சிறப்பாகத் திரைப்படமாக்கப்பட்ட ஒன்று என்ற பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஒளிப்பதிவு - ரஸ்ஸல் ஹார்லன்: ஒரு மேடை நாடகத்தைச் சிறந்த சினிமா அனுபவமாக மாற்றியிருக்கிறார். நீதிமன்ற அரங்கை அவரது கேமரா கண்கள் காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது.

படத்தொகுப்பு - டேனியல் மேண்டெல்: நீதிமன்ற அறையில் ஒவ்வொருவரின் நுட்பமான முகபாவனைகளையும் மிகத் துல்லியமாக வெட்டிக் கோர்த்ததன் மூலம் நாமே நேரில் அமர்ந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

இசை - மேட்டி மால்னெக் : பின்னணி இசை காட்சிக்கேற்றவாறு மர்மம் மற்றும் பதற்றத்துக்கான சூழலை உருவாக்குகிறது. நீதிமன்றக் காட்சிகளில் இசை, அளவுக்கு மீறாமல் நிசப்தத்துக்கு மதிப்பளித்துப் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

சார்லஸ் லாட்டன் : சர் வில்ஃப்ரிட் ராபர்ட்ஸாக இதய நோயாளியாகவும், குறும்புத்தனம் மற்றும் புத்திசாலித்தனம் மிக்க வழக்கறிஞராகவும், மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள் ளார். செவிலியர் மிஸ் பிளிம்சாலுக்கும் (எல்சா லான்செஸ்டர்) அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’ படத்துக்குப் பெரும் சுவாரஸியத்தைச் சேர்க்கிறது. 'சுருட்டும் மதுவும் தரவே மாட்டேன்' என அடம் பிடித்த அந்தப் பெண்மணி, இறுதிக் காட்சியில் கிறிஸ்டினுக்காக அவர் வாதாடப் போவதைக் கண்டு, பிராந்தியை மறந்து விட்டீர்கள் என்று எடுத்துக் கொடுக்கும் தருணம் ரசிக்க வைக்கிறது!

மார்லீன் டீட்ரிக் : கிறிஸ்டினாக அலட்டலும் துணிச்சலும் நிறைந்த மனைவியாகவும் பிளாஷ்பேக்கில் கள்ளங்கபடமற்ற கேபரே பாடகியாகவும் லண்டன் ரயில் நிலையத்தில் முகத்தில் கோரத் தழும்புகளுடன் மாறுவேடத்தில் வரும் மர்மப் பெண்ணாகவும் பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

டைரோன் பவர் : லியோனார்ட் வோல் என்கிற அப்பாவி கணவனாகவும், கொலைப் பழிக்கு அஞ்சி நடுங்குபவனாகவும் தோன்றி, இறுதிக் காட்சிகளில் துரோகியாகி, உண்மை முகத்தை வெளிப்படுத்தும் தருணத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கொலை வழக்காகத் தொடங்கி, உண்மை, பொய், அன்பு, சட்டம், தியாகம், துரோகம் ஆகியவற்றின் சிக்கலான எல்லைகளை ஆராயும் படைப்பாக மாறுகிறது Witness for the Prosecution. தீவிரமான காட்சிகளிலும் இழையோடும் டார்க் ஹ்யூமர், கூர்மையான வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்கள், அசாத்திய மான திரைக்கதை உத்திகள் என திரைப்பட மொழியையே கற்றுத்தரும் இந்த கிளாசிக் படைப்பை, பலரையும் சாட்சியாக அழைத்துத் தாராளமாக ரசித்துப் பார்க்கலாம்!

(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்..)

SCROLL FOR NEXT