பாடகி மடோனா
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி மடோனா, 40 ஆண்டுகளுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வருகிறார். இவருடைய வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாக இருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மடோனாவே இயக்க இருந்தார்.
“இசைக் கலைஞராக, நடனக் கலைஞராக, மனிதராக என் வாழ்க்கை என்னை அழைத்துச் சென்ற அற்புதமான பயணம் குறித்து சொல்ல விரும்புகிறேன். இந்தப் படம் இசையைப் பற்றியே இருக்கும். இசையும், கலையும் தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது” என்று கூறியிருந்தார். யுனிவர்சல் பிக்சர்ஸ் இதைத் தயாரிக்க இருந்தது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக மடோனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “எனது வாழ்க்கையைப் பற்றி படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தேன். அதற்கான திரைக்கதையை எழுத 2 ஆண்டுகள் செலவிட்டேன்; யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகளுடன் இணைந்து, பட்ஜெட் மற்றும் நடிகர்களைத் தேர்வு செய்வது போன்ற பணிகளுக்காக மேலும் 2 ஆண்டுகளைச் செலவிட்டேன். ஆனால், பட்ஜெட் விஷயத்தில் எனக்கும் யுனிவர்சல் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏனெனில், நான் வாழ்ந்தது அசாதாரணமான, பிரம்மாண்டமான வாழ்க்கை; எனவே அதற்குப் பெரிய அளவிலான பட்ஜெட் தேவைப்பட்டது. அவர்கள் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை என நினைக்கிறேன்.
அந்தத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒரு தொடரை உருவாக்க என்னை அணுகியது. அதுவும் நீண்ட செயல் முறையாக அமைந்தது. யுனிவர்சல் நிறுவனத்துக்காக நான் எழுதிய திரைக்கதையை அவர்களிடமிருந்து அதிக விலைக்கு வாங்கினாலன்றி, அதை நான் பயன்படுத்த முடியாது என்ற நிலை இருந்தது. அதனால் என் பயோபிக் கைவிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.