ஹாலிவுட்

யார் இந்த ‘டாக்டர் டூம்’? - எதிர்பார்ப்பை எகிறவிடும் மார்வெல் வில்லன்!

டெக்ஸ்டர்

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கட்டம் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றை உள்ளடக்கிய 'மல்டிவெர்ஸ் சாகா' (Multiverse Saga) அதன் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தானோஸுக்குப் பிறகு மார்வெல் திரையுலகை ஆட்டிப்படைக்கப் போகும் மிகப் பெரிய வில்லன் யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு காமிக்ஸ் உலகிலும் மார்வெல் வரலாற்றிலும் மிக ஆபத்தான, அறிவுக்கூர்மை மிக்க, அமானுஷ்ய சக்திகள் கொண்ட சூப்பர் வில்லனான டாக்டர் டூம் (Doctor Doom) கதாபாத்திரம்தான் என்ற விடை கிடைத்துவிட்டது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கிவிட்டது. வரும் டிசம்பரில் வெளியாக இருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்துக்கான ட்ரெய்லர் வெளியானது முதல் இணையம் முழுக்க டூம் தொடர்பான ரசிகர்களின் தியரிகளும் குவியத் தொடங்கிவிட்டன.

1962-ஆம் ஆண்டு 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' இதழ் 5-ல் மார்வெல் பிதாமகர் என்று அழைக்கப்படும் ஸ்டான் லீ மற்றும் ஜேக் கெர்பி ஆகியோரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் விக்டர் வான் டூம் (Victor Von Doom).

லட்வேரியா (Latveria) என்ற கற்பனை நாட்டின் அரசனான இவர், சாதாரண மனிதராகப் பிறந்து தன் அசாத்திய அறிவாற்றல், அறிவியல் திறமை மற்றும் மாயாஜால கலைகள் மூலம் பிரபஞ்சத்தின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவராக உருவெடுத்தவர்.

தன் முகத்தில் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க இரும்பு முகமூடியையும், கவச உடையையும் அணிந்திருக்கும் டூம், பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கும் பேராசை கொண்டவராக சித்தரிக்கப்படுபவர். 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' குழுவின் தலைவரான ரீட் ரிச்சர்ட்ஸின் மிகப் பெரிய எதிரியாகவும் டூம் திகழ்பவர்.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் உருவாவதற்கு முன்பே, 20-த் சென்சுரி ஃபாக்ஸ் தயாரிப்பில் 2005-ல் வெளியான 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு டாக்டர் டூம் முதன்முதலில் அறிமுகமானார். அதில் ஜூலியன் மெக்மஹோன் (Julian McMahon) விக்டர் வான் டூமாக நடித்திருந்தார்.

'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' (2005) படத்தில் டாக்டர் டூம்

அந்தப் படத்தில் விண்வெளிப் பயணத்தின் போது ஏற்பட்ட கதிர்வீச்சு மாற்றங்களால் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் குழுவினருக்குச் சக்திகள் கிடைப்பது போலவே, டூமுக்கும் உடலை உலோகம் போல மாற்றும் சக்தியும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கிடைப்பதாகக் காட்டப்பட்டது.

ஆனால், காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வடிவம் திருப்தியை அளிக்கவில்லை. காரணம் காமிக்ஸில் டூம் தனக்குத்தானே கவச உடலையும் ஆயுதங்களையும் வடிவமைத்துக் கொண்ட ஒரு மாபெரும் விஞ்ஞானி. அறிவியல் மற்றும் மந்திரக் கலை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர். 2005 படத்தில் அவர் வெறும் பயோ-மெட்டாலிக் சக்திகள் கொண்ட சாதாரண வில்லனாக மட்டுமே சுருக்கப்பட்டுவிட்டார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

தற்போது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸுக்குள் நுழையும் டாக்டர் டூம், ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு மிக முக்கிய காரணம், MCU-வை உலகளவில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் தான் 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்புதான்.

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்திற்கு விடை கொடுத்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது மார்வெலின் மிகக் கொடூர வில்லனாக மறு அவதாரம் எடுத்திருப்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம். மல்டிவெர்ஸில் உள்ள ஆல்டர்னேட் யுனிவர்ஸில் டோனி ஸ்டார்க், வில்லனாக மாறி டாக்டர் டூமாக உருவெடுக்கிறாரா அல்லது முற்றிலும் புதிய விக்டர் வான் டூமாகவே அவர் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

மார்வெல் காமிக்ஸின் மிக முக்கியக் கதைக் களமான 'சீக்ரெட் வார்ஸ்' மற்றும் இன்கர்ஸன் (Incursions) நிகழ்வுகளில்தான் டாக்டர் டூமின் உண்மையான விஸ்வரூபம் வெளிப்படும். இன்கர்ஸன் என்பது மல்டிவெர்ஸில் உள்ள இரண்டு வெவ்வேறு பிரபஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, இரண்டுமே அழியும் ஒரு பேரழிவு நிகழ்வு.

'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2' மற்றும் 'மார்வெல்ஸ்' திரைப்படங்களில் இந்த இன்கர்ஸன் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே காண்பிக்கப்பட்டுவிட்டன. மல்டிவெர்ஸ் பேரழிவை நோக்கிச் செல்லும்போது, அனைத்துப் பிரபஞ்சங்களும் அழிவதைத் தடுக்க டாக்டர் டூம் தனக்கே உரித்தான வழிகளைக் கையாள்கிறார்.

பிரபஞ்சங்களின் மோதலைப் பயன்படுத்தி, அனைத்துப் பிரபஞ்சங்களின் எஞ்சிய பாகங்களையும் ஒன்றிணைத்து 'பேட்டில்வேர்ல்ட்' (Battleworld) என்ற புதிய உலகை உருவாக்கி, அதற்குத் தானே கடவுளாக அரியணை ஏறுவார். இந்த இன்கர்ஸன் கான்செப்ட் தான் வரவிருக்கும் மார்வெல் படங்களின் மையப் புள்ளியாக இருக்கப்போகிறது.

தானோஸ் ஆறு இன்ஃபினிட்டி கற்களை சேகரித்து உலகை அழித்தது போலல்லாமல், டாக்டர் டூம் தன் அறிவாற்றல், மாயாஜாலம் மற்றும் மல்டிவெர்ஸ் நுட்பங்கள் மூலமாக அவெஞ்சர்ஸ் குழுவை நிலைகுலைய வைப்பார். ரீட் ரிச்சர்ட்ஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், தோர் மற்றும் புதிய அவெஞ்சர்ஸ் அனைவரும் இணைந்து இந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே 'டூம்ஸ்டே' படத்தின் கதைக்களமாக இருக்கும்.

2005-ல் சாதாரண வில்லனாகக் காட்டப்பட்ட டூமுக்கும், தற்போது MCU-வில் வரவிருக்கும் டூமுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். வில்லனாக ராபர்ட் டவுனி ஜூனியரின் நடிப்பு, மல்டிவெர்ஸ் சிக்கல்கள், பிரபஞ்சங்களின் மோதல் என அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்து 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தை சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத வில்லனாக மாற்றவுள்ளன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம், திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இப்படம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இப்போதே முன்பதிவில் வசூல் குவிக்க தொடங்கிவிட்டது.

கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் ‘டூம்ஸ்டே’ படத்துக்கான முன்னோட்டமாக மூன்று போஸ்ட் கிரெடிட் காட்சிகளை மார்வெல் சேர்த்துள்ளது. அதில் ‘எண்ட்கேம்’ நிகழ்வுகளுக்குப் பிறகு இன்ஃபினிட்டி கற்களை அந்தந்த இடங்களில் திரும்ப வைத்துவிட்டு தன் காதலி பெக்கி உடன் சேர்ந்து வாழ்வதற்காக செல்லும் கேப்டன் அமெரிக்காவான ஸ்டீவ் ரோஜர்ஸை லோகி சந்திக்கிறார்.

இன்னொரு காட்சியில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படத்துக்குப் பிறகு சிறை போன்றதொரு இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஹல்க் ப்ரூஸ் பேனரை டாக்டர் டூம் கடத்திச் செல்கிறார். ஆனால் இதில் டூமின் குரல் மட்டுமே ஆடியன்ஸுக்கு கேட்கிறது. அவரை திரையில் காட்டவில்லை.

மற்றொரு காட்சி மல்டிவெர்ஸ் சிக்கல்களை கையாளும் டிவிஏ (TVA - Time Variance Authority) பற்றியது. அதன் தலைவரான மாபியஸ், திடீரென மல்டிவெர்ஸ் அமைப்பில் ஏற்படும் குழப்பங்களை காண்கிறார். ஆயிரக்கணக்கான மல்டிவெர்ஸ் உலகங்கள் வீழ்ந்து இன்கர்ஸன் நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன.

இப்படியாக மூன்று புதிய போஸ்ட் கிரெடிட் காட்சிகளின் மூலம் ‘டூம்ஸ்டே’ படத்துக்கான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி விட்டிருக்கிறது மார்வெல். 

SCROLL FOR NEXT