ஹாலிவுட்

‘டச் ஆஃப் ஈவில்’ - 1958: மூழ்கும் நீதியின் இருண்ட முகம் | ஹாலிவுட் மேட்னி 32

ராம்குமார் சுப்பாராமன்

எல்​லைப் பகு​தி​யில் நிகழும் கார் குண்​டு​வெடிப்பை விசா​ரிக்​கும் நேர்​மை​யான மெக்​சிகோ அதி​காரி, அதைத் திசைத்​திருப்ப முயலும் அமெரிக்க ஊழல் போலீஸ் கேப்​டனின் சதியை முறியடிப்​பதே ‘டச் ஆஃப் ஈவில்​’ (TOUCH OF EVIL –1958) திரைப்படத்​தின் ஒரு​வரிக் கதை.

அமெரிக்​கா–மெக்​சிகோ எல்​லைப்​புற இரவில், ஒரு காரின் டிக்​கிக்​குள் டைம் பாம் மறைத்து வைக்​கப்​படு​கிறது. தொழில​திபர் ரூடி லினேக்​கரும் அவரது காதலி​யும் பயணிக்​கும் அந்த கார் எல்​லைச் சாவடியை நோக்​கிச் செல்​கிறது.

அதே நேரத்​தில், மெக்​சிகோ போதைப்​பொருள் தடுப்பு அதி​காரி மிகு​வேல் வர்​காஸ், தன் அமெரிக்க மனைவி சூசனுடன் ஹனிமூனுக்​காக அங்கு வரு​கிறார். எல்​லைச் சாவடி​யில் இரு​வரும் முத்​தமிடும் அந்த விநாடி​யில், கார், பயங்கர சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறுகிறது.

சூசனை ஓட்​டலுக்கு அனுப்​பி​விட்டு தன் கண்​முன்​னால் நடந்த கொலையை வர்​காஸ் விசா​ரிக்க, பரு​ம​னான உடல், கைத்​தடி, திமி​ரான பேச்​சுடன் அதி​காரத்​தின் பயங்கர மான உருவ​மாக அமெரிக்க போலீஸ் கேப்​டன் ஹேங்க் க்வின்​லான் வந்​திறங்​கு​கிறார்.

வந்​தது​மே, எந்த ஆதா​ர​மும் இன்றி “இது டைனமைட் கொலை” என்று அவர் உறு​தி​யாகச் சொல்​வது வர்​காஸுக்​குச் சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. ஒரு மெக்​சிகன் அதி​காரி இந்த விசா​ரணை​யில் ஈடு​படு​வது க்வின்​லானுக்​கும் பிடிக்​க​வில்​லை.

சூசனை ஒரு கும்​பல் பின்​தொடர்ந்​து, ‘அங்​கிள் ஜோ’ என்​றழைக்​கப்​படும் போதைக் கும்​பல் தலை​வன் கிராண்டி முன்​னால் நிறுத்​துகிறார்​கள். கிராண்​டி​யின் சகோ​தரன் போதைப்​பொருள் கடத்​தல் வழக்​கில் வர்​காஸால் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருக்​கிறான்.

அந்த வழக்​கி​லிருந்து அவனை விடுவிக்க வர்​காஸிடம் வற்​புறுத்​தச் சொல்​லி, சூசனை மிரட்​டு​கிறான் கிராண்​டி.அதற்​குப் பணிய மறுத்​து, அங்​கிருந்து தப்​பிக்​கும் அவள் தன் கணவனிடம் தெரிவிக்​கிறாள்.

சூசனை தனிமை​யான ஹோட்​டலில் தங்க வைப்​ப​தற்​காக வர்​காஸ் அழைத்​துச் செல்ல, பாதிவழி​யிலேயே அவரை க்வின்​லான் அழைப்​ப​தாக, ஒரு போலீஸ்​படை வந்து அழைத்​துச் செல்​கிறது. இறந்த தொழில​திபரின் மகளு​டன் காதலில் இருக்​கும் மெக்​சிகன் இளைஞன் சான்​செஸ் வீட்​டை, க்வின்​லான் சோதனை​யிடு​கிறார்.

அவனது குளியலறை​யில் ஒரு ஷூ பெட்​டிக்​குள் டைனமைட் குச்​சிகள் கண்​டு​பிடிக்​கப் படு​கின்​றன. சில நிமிடங்​களுக்கு முன்பு அந்த ஷூ பெட்டி காலி​யாக இருந்​ததை நேரில் பார்த்​திருந்த வர்​காஸ், க்வின்​லானுடன் கடுமை​யான வாக்​கு​வாதத்​தில் ஈடு​படு​கிறார்.

க்வின்​லானின் பழைய வழக்​கு​களை ஆரா​யும் வர்​காஸ், பல ஆண்​டு​களாக அவர் போலிச் சான்​றுகள் மூலம் நிரப​ரா​தி​களைச் சிக்​க​வைத்​திருப்​பதை கண்​டு​பிடிக்​கிறார். தன் ஊழல் வெளிவரும் பயத்​தில் க்வின்​லான், வர்​காஸைப் பழி​வாங்க, கிராண்​டி​யின் மூல​மாக சூசனைக் கடத்​துகிறார்.

கடத்தி வந்​ததும் கிராண்​டியைக் கொன்​று, சூசனுக்​குப் போதைப்​பொருள் கொடுத்து கொலைப் பழியை அவள்​மீது சுமத்த முயல்​கிறார். ஆனால், அவசரத்​தில் தன் கைத்​தடியை அங்​கேயே விட்​டுச் செல்​கிறார். அதைக் கண்​டு​பிடிக்​கும் அவரது விசு​வாச​மான உதவி​யாளர் மென்​ஸீஸ், உண்​மையை உணர்ந்து வர்​காஸின் பக்​கம் நிற்​கிறான்.

தன் மனைவி மீதுள்ள கொலைப் பழியை க்வின்​லானின் வாக்​கு மூலமே தீர்க்​கும் என்​பதை உணர்ந்த வர்​காஸ், மென்​ஸீஸுடன் இணைந்து மறை​முக ஒலிப்​ப​தி​வின் மூலம் க்வின்​லானின் குற்​றத்தை நிரூபிக்க முயல்​கிறார். மென்​ஸீஸ், க்வின்​லானுடன் பேசிக்​கொண்டே பாலத்​தில் நடக்க, சற்​றுத் தொலை​வில் மறைந்​த​படி வர்​காஸ் அதைப் பதிவு செய்​கிறார்.

சதியை உணர்ந்​து​கொண்ட க்வின்​லான், மென்​ஸீஸைச் சுட, இறக்​கும் தரு​வா​யில் மென்​ஸீஸ் திரும்​ப க்வின்​லானைச் சுடு​கிறான். க்வின்​லான் ஏரிக்​குள் மூழ்​கு​கிறான் — அவனது அதி​காரம், ஊழல், நீதியின் இருண்ட முக​மும் அவனோடு சேர்ந்து மூழ்​கு​கிறது.

க்வின்​லான் போலிச் சான்​றுகள் மூலம் சிக்​க​வைத்த சான்​செஸ்​தான் உண்​மை​யான கொலை​யாளி என்ற உண்மை இறு​தி​யில் தெரிய​வரு​கிறது. தன் உள்​ளுணர்வு சரி​யாக இருந்​தா​லும், நீதியை நிலை​நாட்ட அவன் கையாண்ட போலித்​தனமே அவனது வீழ்ச்​சிக்​குக் காரண​மாகிறது என்ற திரைக்​கதை நுட்​பத்​துடன் படம் முடிவடைகிறது.

உலக சினிமா வரலாற்​றின் சிறந்த ‘சிட்​டிசன் கேன்’ படத்தை இயக்​கிய மாபெரும் மேதை ஆர்​சன் வெல்​ஸ், 1950-களின் அமெரிக்​க-மெக்​சிகோ எல்​லைப்​புற ஊழல் பின்​னணி​யில் —

அதி​காரத் திமிரும் இனவெறி​யும் ஒரு காவல் அதி​காரியை எவ்​வாறு அழி​வுக்​குத் தள்​ளுகிறது என்​ப​தை, நல்​ல​வன்​-கெட்​ட​வன் என்ற நேர்​கோட்​டுப் பிரிப்​பில்​லாமல் உளவியல் காவிய​மாகக் காட்​சிப்​படுத்​திய திரைப்​படம் இது.

யுனிவர்​சல் இன்​டர்​நேஷனல் தயாரித்திருக்​கும் இதில், வில்​லன் நடிக​ராக உள்ளே நுழைந்த ஆர்​சன் வெல்​ஸ், சார்ல்​டன் ஹெஸ்​டன் மூலம் இயக்​கும் வாய்ப்​பைப் பெற்​று, ஒயிட் மாஸ்​டர்​சனின் மூலக்​கதையை புத்​தி​சாலித்​தன​மான திரைக்​கதை​யாக்​கி, நடிப்​பு, இயக்​கம் அனைத்​தி​லும் மேம்​பட்ட படைப்பை வழங்கி இருக்​கிறார்.

ஒளிப்​ப​தி​வாளர் ரஸ்​ஸல் மெட்​டி​யின் வித்​தி​யாச​மான கேமரா கோணங்​கள் படம் முழு​வதும் நம்மை பதற்​றத்​தில் வைக்​கின்​றன. தொடக்​கத்​தில் வரும் 3.5 நிமிட சிங்​கிள் ஷாட், சிறந்த கேமரா இயக்​கங்​களில் ஒன்​றாகப் போற்​றப்​படு​கிறது.

கார், டிராபிக், எல்​லைச் சாவடி, மனிதர்​கள் அனைத்​தை​யும் ஒரே காட்​சி​யில் இணைத்​து, “எப்​போது வெடிக்​கும்?” என்ற பதற்​றத்தை பார்​வை​யாளரின் நரம்​புக்​குள் ஊற்​றி​யிருப்​பது அசாத்​திய திரைமொழி.

எடிட்​டர்​கள் விர்​ஜில் வோகல் மற்​றும் ஆரோன் ஸ்டீல் ஆகியோரின் விறு​விறுப்​பான ‘இணை எடிட்​டிங்’ உத்​தி, ஒரே நேரத்​தில் இரு​வேறு இடங்​களில் நடக்​கும் பதற்​றத்​​தைப் பார்​வை​யாள​ருக்​குக் கடத்​துகிறது. யுனிவர்​சல் நிறு​வனம் ஆர்​சன் வெல்​ஸுடன் ஏற்​பட்ட முரண்​பாட்​டால் அவர்​களே தீர்​மானித்த இறுதி வடிவத்​தைப் பார்த்த ஆர்​சன் வெல்​ஸ், 58 பக்க எடிட்​டிங் குறிப்பு எழு​திக் கொடுத்​தார்.

அக்​குறிப்​பு​களின்​படியே பின்​னாட்​களில் மறு​தொகுப்பு (எடிட்​டர்: வால்​டர் முர்ச்) செய்​தனர். சம்​பவங்​களை எடிட்​டிங் வெட்​டு​கள் இன்றி ஒலி அமைப்​பின் மூலம் மட்​டுமே இணைக்க வேண்​டும் என்ற அவரது ஆடியோ-​விஷுவல் சிந்​தனை, உலகத் திரை மொழி​யின் பாடப்​புத்​தகம்.

ஹென்றி மான்​சினி பாரம்​பரிய ஆர்​கெஸ்ட்ரா இசையைத் தவிர்த்து - எல்​லை​யோர ரேடியோ இசைகள், லத்​தீன் ஜாஸ், தெரு ஒலிகள், தூர வாக​னச் சத்​தங்​கள் என நகரத்​தின் உயிரோட்​டத்​தையே இசை​யாக மாற்​றி​யுள்​ளார்.

க்வின்​லான் (ஆர்​சன் வெல்​ஸ்): உடைந்த யானையைப் போன்ற கனமான உடல்​மொழி, தடு​மாறும் நடை, கைத்​தடி, மது​வில் கரைந்த குரல் என அதி​காரத்​தின் சீரழி​வை​யும் அக இருளை​யும் மிரட்​டலாக வெளிப்​படுத்​துகிறார்.

வர்​காஸ் (சார்ல்​டன் ஹெஸ்​டன்): நேராக நிமிர்ந்த உடல், கட்​டுப்​படுத்​தப்​பட்ட பார்​வை, அமை​தி​யான குரல், சட்​டத்​தின் மீதான நம்​பிக்​கை​யை​யும் நீதிக்​கான உறு​தி​யை​யும் வெளிப் படுத்​துகிறார். வர்​காஸின் மனைவி சூச​னாக வரும் ஜானெட் லீ, பயமும் தைரிய​மும் கலந்த பாத்​திரத்தை இயல்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

ஆல்ஃப்​ரட் ஹிட்ச்​காக்​கின் ‘சைக்​கோ’ படத்​தின் நாயகி​யும் இவரே. “சட்​டத்​தைக் காக்​கும் அமைப்பே குற்​றத்​தின் கரு​வி​யாக மாறலாம்” என்ற அரசி​யல் உண்​மையை இப்​படம் வெளிப்​படை​யாக முன்​வைக்​கிறது.

அதனால்​தான் இப்​படம் ஒரு க்ரைம் த்ரில்​ல​ராக மட்​டுமல்​லாமல், க்ளாசிக் ஃபிலிம் நாய்ர் இயக்​கத்​தின் பெரும் கா​விய​மாக இன்​றள​வும்​ தி​கழ்​கிறது. மனிதனின்​ அக இருளை எல்​லை நகர இரவாக மாற்​றிய ‘டச்​ ஆஃப்​ ஈவிலை’ — எவ்​வித பயமுமின்​றி நள்​ளிர​விலும்​ கண்​டுகளிக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும் படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT