ஹாலிவுட்

‘The Odyssey’ விமர்சனம்: திரைக் காவியமா, தேறாத பிரம்மாண்டமா?

சல்மான்

சர்வதேச இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் ‘ஒடிசி’ காப்பியத்துக்கு நவீன யுகத்தின் மிகச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது திரை வடிவம் கொடுத்துள்ளார். ஏற்கெனவே இதே கதையை தழுவி 2004-ஆம் ஆண்டு ‘டிராய்’ வெளியாகி இருந்தாலும், இப்படம் ட்ராஜன் போருக்குப் பிந்தைய ஒடிசியஸின் பயணத்தைப் பற்றி பேசுகிறது. படத்தின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்புக்கு உள்ளாகி தற்போது திரையில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ட்ராஜன் போரில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இத்தாகா நாட்டின் மன்னனான ஒடிசியஸ் (மேட் டாமன்) தனது படைகளுடன் தாய்நாடு திரும்பக் கடலில் பயணமாகிறார். ஆனால், அவரது அதீத ஆணவத்தாலும், வழியில் அவர் செய்யும் சில தவறுகளாலும் பல்வேறு தடைகளை அவரும் அவரது படைகளும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பல ஆண்டுகள் கடந்தும் ஒடிசியஸ் வீடு திரும்பாததால், இத்தாகா நாட்டில் அவனது மனைவி பெனிலோப்பையும் (ஆனி ஹாத்வே) அரண்மனையையும் கைப்பற்றி, அவரை திருமணம் செய்ய ஒரு பேராசை கும்பல் சூழ்ச்சி செய்கிறது. ஒடிசியஸின் மகன் டெலிமக்கஸ் (டாம் ஹாலண்ட்) ஒருபுறம் தன் தந்தையைத் தேட, மறுபுறம் ஒடிசியஸ் தனது சாதுர்யத்தால் அத்தனை தடைகளையும் கடந்து, தன் நாட்டுக்கு எப்படி திரும்புகிறார் என்பதே ‘தி ஒடிசி’ படத்தின் கதை.

நோலன் இக்கதையை ஒரு பிரம்மாண்ட போரின் முடிவிலிருந்து தொடங்குகிறார். ட்ராய் நகரம் வீழ்ந்துவிட்டது, வென்றவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர், ஆனால் ஒடிசியஸ் மட்டும் எங்கோ ஒரு தீவில் சிக்கிக்கொண்டுள்ளார். அவரது ‘வீடு திரும்புதல்’ என்பதுதான் நோலன் எடுத்துக் கொண்ட மையக்கரு.

நோலனின் ஒட்டுமொத்த திரை வரிசையை பார்த்தால், அவர் கடந்த 30 ஆண்டுகளாக வீடு திரும்பத் துடிக்கும் மனிதர்களைப் பற்றியே படம் எடுத்து வருகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ‘மெமென்டோ, ‘இன்செப்ஷன்’, ‘இண்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’ என அத்தனை படங்களின் மையப்புள்ளியும் நாயகனின் ஏதோ ஒரு வகையில் ’வீடு திரும்புதல்’ என்ற விஷயத்தையே மையமாக கொண்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் தனக்கென ஒரு பெரும் 'ரசிக பக்தர்கள்' பட்டாளத்தைக் கொண்டுள்ள நோலனின் படங்கள் என்றாலே, அவை வெளியாவதற்கு முன்பே ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றுவிடும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்த தொன்ம காவியத்தை அவர் கையாண்ட விதம், அவரது தீவிர ரசிகர்களுக்கு சற்றே ஆச்சர்யமான வகையில்தான் அமைந்துள்ளது. ஏனெனில், இது நோலனின் பிரம்மாண்டமான படைப்பாக இருந்தாலும், அதை தேவையின்றி நமக்கு நினைவூட்ட அவர் எங்கும் முயலவில்லை. முழுக்க முழுக்க ஃபேண்டசி கதையான இதை அவர் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் பீரியட் டிராமா போல மட்டும்தான் அணுகி இருக்கிறார்.

மேட் டாமன் தனது திரைப் பயணத்தின் மிகச் சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். தந்திரமும், குற்ற உணர்வும் கொண்ட ஒரு மன்னனின் புத்திசாலித்தனம், எப்படி அவனைக் காப்பதோடு, அவனுடன் இருப்பவர்களையும் சேர்த்தே வஞ்சிக்கிறது என்பதைத் தனது தேர்ந்த நடிப்பால் திறம்பட காட்டியுள்ளார். இன்னொரு புறம் தனது ‘ஸ்பைடர்மேன்’ என்ற அடையாளத்தை மறக்கச் செய்யும் வகையில், டாம் ஹாலண்ட் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

இவர்கள் அனைவரையும் விட மிகச் சிறந்த நடிப்பு ஆனி ஹாத்வே உடையது என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். இவர்களுடன் ஹிமேஷ் படேல், ஜான் லெகுவிஸாமோ ஆகியோர் ஒடிசியஸின் நிழலில் வாழும் மனிதர்களாக நல்ல நடிப்பை தந்துள்ளனர். ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்திய லுபிடா நியோங்கோ, எலியாட் பேஜ் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை. ஸெண்டாயா கதாபாத்திரமும் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம்.

காட்சி ரீதியாக நோலன் எப்போதுமே அனலாக் முறையிலான படப்பிடிப்பையே விரும்புபவர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இதிலும் சிஜிஐ மற்றும் க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். அவற்றின் பலனை பெரிய திரையின் ஒவ்வொரு அங்குலத்திலும் அனுபவிக்க முடிகிறது. அந்த மரக் குதிரையின் பிரம்மாண்டம், அதற்குள் வீரர்கள் படும் சிரமம், உயரமான கட்டிடம் தீப்பற்றி எரியும்போது வீரர்கள் தப்பி ஓடும் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகளை விவரிக்க பிரம்மாண்டம் என்ற ஒரு வார்த்தை போதாது. 

மூலக் கதையின் ஹைலைட் ஆன பல கற்பனையான விஷயங்கள் கதையில் இருந்தாலும், நோலன் அவற்றை கொண்டு இதை ஒரு ஃபேண்டஸி படமாக மாற்றாமல், அவற்றை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு முழுக்க முழுக்க ஒடிசியஸின் மன ஓட்டங்களின் பின்னணியிலேயே கதையை நகர்த்தியுள்ளார்.

ஹோய்ட் வான் ஹோய்ட்டேமாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பிரம்மாண்டத்தை கூட்டி நம்மை திரைக்குள்ளேயே அழைத்து சென்று விடுகிறது. லுட்விக் கோரன்சனின் பின்னணி இசை, படத்துக்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது. படத்தின் கடைசி 20 நிமிடங்களில் பின்னணி இசை ருத்ரதாண்டவம் ஆடுகிறது.

தொழில்நுட்ப ரீதியாகப் படம் மிரட்டினாலும், ஒரு முழுமையான திரைப்படமாக இதில் இருக்கும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படைப்புகளான ‘டெனெட்’, ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆகிய படங்களை திரையரங்கில் பார்த்தபோது ஜனரஞ்சக சினிமா ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே அயற்சியும் சலிப்பும் இப்படத்திலும் தொடர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

மூலக் கதை பற்றி அறிந்தவர்களுக்கும், நோலனின் திரை மொழியைத் தொடர்ந்து உற்று நோக்கும் தீவிர ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு திரை விருந்தாக அமையலாம். ஆனால், எந்தவொரு முன் தயாரிப்பும் இல்லாமல், வெறும் வார இறுதி பொழுதுபோக்குக்காக திரையரங்கினுள்  நுழையும் ஒரு ரசிகருக்கு, இப்படம் முழு திருப்தியை தருமா என்பது பெருத்த சந்தேகமே.

காட்சி வழி கதை சொல்லல் குறைந்து வசனங்களின் அதீத அடர்த்தியால் திரைக்கதை திணறும்போது, சராசரி பார்வையாளரால் கதையோடு உணர்வுபூர்வமாக ஒன்ற முடியாமல் ஓர் அந்நியப்பட்ட உணர்வையே தருகிறது. இதுதான் நோலனின் கடைசி இரண்டு படங்களிலும் நிகழ்ந்தது. காட்சிகளின் பிரம்மாண்டத்தால் ஈர்க்கப்பட்டாலும், கதை சொல்லலில் நோலன் தொடர்ந்து கடைப்பிடிக்கும் இந்த முறை, பெரும்பாலான ரசிகர்களுக்கு வெற்று பிரம்மிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. 

இதன் விளைவாக, படத்தின் நீளம் மற்றும் திரைக்கதையின் வேகம்  பெரும் தொய்வை தருகிறது. பல காட்சிகள் தேவையேயின்றி இழுத்தடிக்கப்பட்டு, பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றன. இதனால் படம் முழுக்க இருக்கும் பிரம்மாண்டங்கள் திரைக்கதை சுவாரஸ்யத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

மலிவான பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து, பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்ட முயன்றாலும், நோலனின் 'தி ஒடிசி' படம் அதன் பலவீனமான திரைக்கதையால் ஒரு சுமாரான படைப்பாகவே சுருங்கிவிடுகிறது. காட்சி பிரம்மாண்டத்தை நம்மை உணர வைக்க இயக்குநர் எடுத்த முயற்சி, திரைக்கதையின் ஆழமின்மையால் சறுக்குகிறது.

ஒடிசியஸின் பல ஆண்டு காலப் போராட்டமும், அவனது குடும்பத்தின் வலியும் வெறும் மேலோட்டமான எபிசோடுகளாகக் கடந்து செல்வதால், பார்வையாளர்களால் கதாபாத்திரங்களுடன் முழுமையாக ஒன்ற முடிவதில்லை.

இறுதியில், மேக்கிங் பிரம்மாண்டங்களை தாண்டி, ஒரு திரைப்படமாக ரசிகர்களைக் கவரத் தவறிய, திரைக்கதை அளவில் மிகவும் சுமாரான ஒரு படமாகவே ‘தி ஒடிசி’ நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT