ஹாலிவுட்

‘த ஹிட்ச் - ஹைக்​கர்’ - ரோடு த்ரில்லருக்கு இலக்கணம் வகுத்த பெண் இயக்குநர் | ஹாலிவுட் மேட்னி 17

ராம்குமார் சுப்பாராமன்

மீன் பிடிக்​கச் சென்ற நண்​பர்​களை ஒரு சைக்கோ கொலை​காரன் சிறைபிடித்​து, தான் தப்​பிக்க முயல்​வதே ‘த ஹிட்ச் -ஹைக்​கர்’ திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை. ஆளில்​லாத நெடுஞ்​சாலை. இரு கால்​கள் நடந்து செல்​கின்​றன, லிப்ட் கேட்டு ஒரு கை நீள்கிறது. ஒரு கார் வந்து நிற்​கிறது.

கதவு திறக்​கிறது. லிஃப்ட் கேட்​ட​வனை ஏற்​றிக் கொண்டு கார் பயணிக்​கிறது. சற்று தொலை​வில் ஒரு பெண்​ணின் அலறல். இரு துப்​பாக்கி குண்​டு​கள் வெடிக்​கும் சத்​தம். தம்​ப​தி​யர் படு​கொலை. அடுத்​த​நாள் பத்​திரி​கை​களில் ‘எம்​மெட் மையர்​ஸ்’ என்ற பழைய குற்​ற​வாளி பரபரப்​புச் செய்​தி​யாகிறான். இன்​னொரு சாலை. இன்​னொரு கொலை.

வழி​யில் ஆபத்து காத்​திருப்​பது தெரி​யாமல் ராய் காலின்​ஸ், கில்​பர்ட் போவென் என்ற நண்​பர்​கள் விடு​முறையைக் கழிக்க, கலிஃ​போர்​னி​யா​விலிருந்து மெக்​ஸிகோவுக்கு மீன் பிடிக்​கச் செல்​கின்​றனர். இரவில், சாலை​யின் ஓரமாக ஒரு கார் நிற்​கிறது. ‘அவன்’ லிப்ட் கேட்​கிறான்.

‘கேஸ் தீர்ந்​திருச்​சா?” என்று மனி​தாபி​மானத்​தோடு அவனை ஏற்​றிக் கொள்​கிறார்​கள். கில்​பர்ட் அவனிடம் சினேக​மாக சிகரெட்டை நீட்ட, பதி​லுக்கு அவன் துப்​பாக்​கியை நீட்​டு​கிறான். தாங்​கள் லிப்ட் கொடுத்​தது சக மனிதனுக்கு அல்ல, மரணத்​துக்கு என்​பதை அப்​போது​தான் உணர்​கிறார்​கள்.

          

அவன் தன்னை ‘எம்​மெட் மையர்​ஸ்’ என்று அறி​முகம் செய்து கொள்​கிறான். அவர்​களது பெயர், குடும்​பம் பற்றி விசா​ரிக்​கிறான். வழி​யில் ஒரு கேஸ் ஸ்டேஷனில் நிறுத்தி காருக்கு கேஸ் நிரப்​பிக் கொள்​கிறார்​கள். ஒரு ‘ரோட் மேப்’ வாங்​கு​கிறான். அவனுக்கு சாண்டா ரோசாலி​யா சென்​று, கப்​பல் ஏறி, அங்​கிருந்து குய்​மாஸ் நகருக்​குத் தப்​பிச் செல்​வது​தான் திட்​டம். அவன் சேர வேண்​டிய இடம் வந்​ததும் அவர்​களைக் கொன்​று

​விட்டு காரை எடுத்​துக் கொள்​வ​தாகப் பீதியை ஏற்​படுத்​துகிறான். பாறை​கள் நிறைந்த பகு​தி​யில் ராயின் கையில் ‘பீர்’ கேனைக் கொடுத்து தூரத்​தில் நிற்​கச் சொல்​கிறான். கில்​பர்ட்​டிடம் அவனது நீண்ட துப்​பாக்​கியைக் கொடுத்து பீர் கேனை சுடச் சொல்​கிறான்.

குறி தவறி​னால் நண்​பன் காலி. ராய்க்கு வியர்க்​கிறது. சைக்​கோ​வின் துப்​பாக்கி குறி பார்க்​கிறதே என்ற பயத்​தில், தன் உயிரைக் கையில் பிடித்​துக்​கொண்டு நண்​பனை நோக்​கிச் சுடு​கிறான் கில்​பர்ட். ராயின் கையிலுள்ள கேன் தெறிக்​கிறது. ‘விளை​யாட்டு முடிந்​தது’ என்​கிறான் சைக்​கோ.

அவன் செய்த கொலைச் செய்​தி​கள், கார் ரேடியோ வழி​யாக ஒலிக்​கின்​றன. தன்​னைத் தேடி அனைத்து செக்​போஸ்ட்​களி​லும் போலீஸ் எச்​சரிக்​கை​யாக இருப்​ப​தை​யும், ஹெலி​காப்​டர் மூலம் பாலை​வனத்​தில் போலீஸ் சல்​லடை போடு​வதை​யும் சைக்கோ அறிகிறான்.

இடது: இடா லுபினோ

தூங்​கும்​போதும் திறந்​த​படி இருக்​கும் சைக்​கோ​வின் வலது கண்​ணும், இடது கை ‘கன்​’னும் இரவிலும் குறி வைத்​துக் கொண்டே இருக்​கிறது. துப்​பாக்கி முனை​யில் அவர்​களை பணயக் கைதி​களாகப் பிடித்​த​படியே, சாண்டா ரோசாலி​யா படகுத்​துறை வந்து விடு​கிறான்.

பெர்​ரி​யில் ஏறி சைக்கோ தப்​பிச் சென்​றா​னா? சைக்​கோ​விட​மிருந்து நண்​பர்​கள் தப்​பி​னார்​களா? என்​ப​தைப் பரபரப்​புடன் சொல்​வதே இப்​படம். 1950-களில் அமெரிக்​காவையே உலுக்​கிய ‘பில்லி குக்’ என்ற கொலை​காரனின் நிஜ வாழ்க்​கை​யைத் தழுவி எடுக்​கப்​பட்ட இந்​தக் கொடூர​மான த்ரில்​லரை இயக்​கிய​வர் ஒரு பெண்.

ஆண்​கள் மட்​டுமே கோலோச்​சிக் கொண்​டிருந்த “ஃபிலிம் நாய்ர்” (Film Noir) வகையை இயக்​கிய முதல் பெண் இயக்குநர் ‘இடா லுபினோ’​தான். பெண்​கள் இயக்​கி​னால் படம் மென்​மை​யாக இருக்​கும் என்ற பிம்​பத்தை உடைத்​து, “இது ஒரு மனிதன், ஒரு துப்​பாக்​கி, ஒரு காரின் கதை... அந்​தக் கார் உங்​களு​டைய​தாகக் கூட இருக்​கலாம்!” என்ற எச்​சரிக்​கையோடு படத்தை நகர்த்​துகிறார்.

திரை​யில் கொலை​காரனின் முகத்​தைக் காட்​டா​மல் வெறும் நிழல் உரு​வங்​களை மட்​டுமே காட்​டு​வதன் மூலம், அடுத்த 70 நிமிடம் இது உங்​களுக்​கும் நடக்​கலாம்’ என்று நம்மை ‘திக் திக்’ மனநிலை​யில் அமர வைக்​கிறார். சைக்​கோ​வின் தொடர் கொலைகளை ஷாட்​களின்​மூலமே காட்​டி​யிருப்​பது அழகியலின் பாடம்.

ரேடியோ செய்தி கேட்டு சைக்கோ எச்​சரிக்கை ஆவானே என்று நாம் நினைக்​கும்​போதே சைக்​கோவை திசை திருப்ப, தவறான தகவலை போலீ​ஸார் அறிவிக்​கச் சொல்​லும் உத்​தி​யும், சைக்​கோ, தான் ஏன் இப்​படி இருக்​கிறேன் என்று சொல்​லும் காட்​சி​யும் ஆச்​சரியப்பட வைத்​தன.

நிக்​கோலஸ் முஸு​ரா​கா​வின் கேம​ரா, பாலை​வனத்​தின் சுட்​டெரிக்​கும் பகல் வெயி​லிலும் பயத்தை உரு​வாக்​கு​கிறது. பாலை​வனத்​தின் பிர​மாண்​டத்​தை​யும், காருக்​குள் குறுகிய இடத்​தை​யும் அற்​புத​மாக கேம​ரா​வில் அடக்​கி​யுள்​ளார்.

வில்​லி​யம் தால்​மன் ஏற்​றுக் கொண்ட ‘எம்​மெட் மையர்​ஸ்’ கதா​பாத்​திரம் வித்​தி​யாச​மான வடிவ​மைப்​பு. வலது கண் இமை ஒரு நரம்​புச் சிக்​கலால் மூடவே மூடாது. “நான் தூங்​கி​னாலும் என் ஒரு கண் உங்​களைப் பார்த்​துக்​கொண்டே இருக்​கும், அதனால் தப்​பிக்க நினைக்​காதீர்​கள்” என்று அவர் சொல்​லும் இடம் குலைநடுங்க வைக்​கும். அவரது குரலும், ஏளனச் சிரிப்​புமே நடுங்க வைக்​கிறது.

படகுத்​துறை​யில் போலீ​ஸார் சுற்றி வளைத்​தவுடன் மற்​றவர்​களைப் பயமுறுத்​திய அவரது பார்​வை, பயந்து நடுங்கி கெஞ்​சும்​போது, எப்​பேர்ப்​பட்ட கொடூரனும், மாட்டும் ​போது எவ்​வளவு கோழை​யாக மாறு​வான் என்​பதை உணர்த்​துகிறார்.

‘ராய் காலின்​ஸ்’ ஆக நடித்​திருக்​கும் எட்​மண்ட் ஓ’பிரியன், சைக்​கோ​வின் கட்​டளைக்​குக் கட்​டுப்​பட்டு நடக்​கும் சாமானியன். பாலைநிலத்​தில் துப்​பாக்கி அவரைக் குறி பார்ப்​ப​தை​யும் மீறி, வானில் சுற்​றும் ஹெலி​காப்​டரைப் பார்த்து உதவி கேட்​கும் இடத்​தில் கலங்க வைக்​கிறார்.

ஃபி​ராங்க் லவ்​ஜாய் கண்​களி​லேயே பதற்​றத்​தைக் காட்​டும் ‘கில்​பர்ட்​’​டாக மிரட்​டு​கிறார். போலீ​ஸாரிடம் சைக்கோ மாட்​டிய​வுடன் அடக்கி வைத்​திருந்த ஆத்​திரத்​தையெல்​லாம் அவன்​மீது அடி​யாக இறக்​கும்​போது திரையரங்கே கைதட்​டும்.

எடிட்​டர் டக்​ளஸ் ஸ்டீவர்ட், 71 நிமிடங்​களும் நம்மை பரபரப்​பாக வைத்​திருக்​கிறார். கார் ஓடிக்​கொண்டே இருப்​ப​தைப் போல​வே, காட்​சிகளும் எங்​கும் நிற்​காமல் பயணிப்​பது எடிட்​டிங்​கின் மிகப்​பெரிய பலம்.

இசையமைப்​பாளர் லெய்த் ஸ்டீவன்​ஸ், இரைச்​சலான இசையைத் தவிர்த்​து​விட்​டு, பாலை​வனத்​தின் அமானுஷ்ய அமை​தி​யையே திகில் இசை​யாக மாற்​றி​யிருக்​கிறார். கார் பயணத்​தைக் காட்​டும்​போதெல்​லாம் ஏதோ நடக்​கப் போகிறது என்ற பயத்தை ஏற்​படுத்​துகிறது.

ராபர்ட் ஜோசப்​பின் கதையைத் தழுவி இயக்குநர் ஐடா லுபினோ​வும், கணவர் கோலியர் யங்​கும் இணைந்து திரைக்​கதை எழு​தி, தயாரித்த சுயாதீனப் படம் இது. ஸ்டூடியோக்​களின் குறுக்​கீடு இல்​லாத​தால் அவர்​கள் நினைத்த அந்​தக் ‘கொடூர​மான, வறண்ட’ கதையைச் சுதந்​திர​மாகப் பதிவு செய்ய முடிந்​தது.

இன்று வரும் பல ‘ரோடு த்ரில்​லர்’ படங்​களுக்கு 70 ஆண்​டு​களுக்கு முன்பே இலக்​கணம் வகுத்த இப்​படம், அமெரிக்​​கா​வின்​ தேசிய திரைப்​படப்​ பதிவேட்​டில்​ முக்​கி​யத்​து​வம்​ ​வாய்​ந்​த பட​மாகப்​ ​பாது​காக்​கப்​படு​கிறது. பகல்​ பொழுதை ஒரு ‘த்​ரில்​ ரைடு’ அனுபவத்​தோடு கழிக்​க நினைப்​பவர்​கள்​ இப்​படத்​தைத்​ ​தா​ராள​மாகப்​ ​பார்​க்​கலாம்​.

(செவ்​​வாய்​தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

SCROLL FOR NEXT