இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மார்வெல் என்பதையும் தாண்டி ஸ்பைடர்மேனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பதை ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகப் பெரிய ஹைப், பிரம்மாண்ட ஓபனிங், சென்னையில் முதல் 3 நாட்கள் எங்கும் டிக்கெட் கிடைக்காத நிலை என மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கிறார் ஸ்பைடர்மேன்.
முந்தைய பாகம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
'நோ வே ஹோம்' படத்தின் இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம் முழுமைக்கும் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) யார் என்பதே மறந்துபோகிறது. தன் காதலி எம்.ஜே (ஸெண்டாயா) மற்றும் உயிர் நண்பன் நெட் (ஜேக்கப் படலோன்) ஆகியோரின் உயிரைப் பாதுகாக்க, தனது அடையாளத்தை தியாகம் செய்த பீட்டர் பார்க்கர், தற்போது நியூயார்க் நகரின் சிறிய வாடகை வீட்டில் முற்றிலும் தனிமையில் வாழ்கிறார். தன் தனிமையையும் துயரத்தையும் மறக்க ஸ்பைடர்மேனாக ஓய்வில்லாமல் உழைக்கிறார்.
இந்தச் சூழலில், நியூயார்க் நகரில் திடீரென ஏற்படும் ஒருவிதமான அமானுஷ்ய மாற்றங்கள் பொது மக்களை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன. 'டேமேஜ் கன்ட்ரோல்' என்ற அமைப்பின் தலைமையகத்தில் மறைக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றை வேட்டையாடத் துடிக்கும் அந்தப் புலப்படாத சக்தியைத் தடுக்கப் புறப்படும் பீட்டர், அதை செய்து முடித்தாரா என்பதுதான் மையக் கதை.
ட்ரெய்லரிலேயே சொல்லப்பட்டபடி படத்தின் மிக முக்கியமான அம்சம், பீட்டர் பார்க்கரின் உளவியல் மற்றும் உடலியல் போராட்டம். தனிமையின் விளைவாக அவரது உடலில் ஏற்கெனவே மாற்றமடைந்த சிலந்தி டிஎன்ஏ மீண்டும் மாறத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற இயற்கையான வலை உற்பத்தி என அவரது உடலே அவருக்கு எதிராக மாறுகிறது.
திரையரங்குகளில் படம் தொடங்கும் அந்த முதல் நொடியிலிருந்தே, அரங்கம் அதிரும் விசில் சத்தமும் கைதட்டல்களும் இந்த படத்தை மீண்டும் ஒரு மார்வெல் திருவிழாவாக மாற்றுகின்றன.
தன் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து ஒவ்வொரு காட்சியிலும் அவர்களை குதூகலிக்க வைக்கும் வித்தை மார்வெல் நிறுவனத்துக்கு இதிலும் கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது.
குழந்தைகளில் தொடங்கி 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் வரை அத்தனை தலைமுறையினரையும் தனது அசாத்திய சாகசங்களால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஓர் உலகளாவிய பிம்பமாக ஸ்பைடர்மேன் திகழ்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது.
குறிப்பாக, இப்படத்தில் கட்டிடம் விட்டு கட்டிடம் தாவும் சாகசக் காட்சிகளும், முதல் நபர் பார்வையில் ஸ்பைடர்மேன் காற்றில் பாயும் அந்த மயிர்க்கூச்செறியும் தருணங்களும் திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு ரசிகரையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகின்றன.
ஒரு பெரிய ஸ்டார் ஹீரோவின் மாஸ் என்ட்ரிக்கு நிகராக, ஸ்பைடர்மேன் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். முந்தைய படங்களை காட்டிலும் சாகசக் காட்சிகள், ஆக்ஷனுக்கு படக்குழு அசாத்தியமான உழைப்பை கொட்டி இருக்கிறது.
இருப்பினும், இந்த பிரம்மாண்டமான காட்சிகளும் சாகசங்களும் ஒருபுறம் இருந்தாலும், இப்படம் அந்த பிரம்மாண்டத்தைத் தாண்டிச் சென்று பீட்டர் பார்க்கரின் உள்ளுணர்வுகளையும் அவனது தனிமையின் வலியையும் பேச முற்படும் இடங்களில்தான் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தைத் தருகிறது. இதுவரையிலான மார்வெல் படங்களில் மனித உணர்வுகளை மிக ஆழமாக பேசிய படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பாக, பனிஷர் கதாபாத்திரத்துக்கும் ஸ்பைடர் மேனுக்கும் இடையே நடக்கும் இயல்பான உரையாடல்கள், ஸெண்டாயா, நெட் இடையிலான காட்சிகள் மனதை தொடுகின்றன. ஹல்க் போன்ற கதாபாத்திரங்களும் தேவையற்றத் திணிப்பாக இல்லாமல் கதையின் ஓட்டத்துக்கு உதவுகின்றன.
டாம் ஹாலண்ட் தனது மிகச் சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். எம்.ஜே தன்னை ஓர் அறிமுகமற்ற நபராகக் கடந்து செல்லும்போதும், அவரது கண்கள் தன்னைச் சற்றாவது அடையாளம் கண்டுகொள்ளாதா என்று ஏங்கும்போதும் அவரது நடிப்பு மிளிர்கிறது.
ஸெண்டாயா, ஜேக்கப் படலோன் குறைவான நேரமே வந்தாலும் தங்கள் நடிப்பால் கவர்கின்றனர். 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' புகழ் சேடி சிங்கின் புதிய வரவு படத்துக்கு பெரிய பலம். எனினும் மார்வெல் காமிக்ஸில் மிக முக்கியமான ஜீன் கிரே கதாபாத்திரத்தை இன்னும் வலுவானதாக பதிய வைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ப்ரெட் பாவ்லாக்கின் கேமரா, நியூயார்க் நகரத்தின் கட்டிடங்களுக்கு இடையே ஸ்பைடர்மேனுடன் சேர்த்து நம்மையும் பறக்க வைக்கிறது. ஒரு சாகசக் காட்சியும் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம். முதல் நபர் பார்வையில் கேமரா சுழன்று ஸ்பைடர் மேனின் அசைவுகளை நுணுக்கமாக பதிவு செய்திருப்பது அற்புதம்.
இவ்வளவு ஆழமான உணர்வுகள் இருந்தாலும், கதாநாயகன் தன் துயரங்களை மறக்க நகைச்சுவையை ஒரு கேடயமாகப் பயன்படுத்தும் அதே பழைய மார்வெல் பாணி இதிலும் தொடர்கிறது. உணர்வுபூர்வமான காட்சிகள் உச்சம் தொடும் நேரத்தில், ஆக்ஷன் காட்சிகள் குறுக்கிடுவது ஏமாற்றம். அதே போல க்ளைமாக்ஸ் நீளத்தை குறைத்திருக்கலாம். மிக நீண்ட வசனங்கள் எப்போது படம் முடியும் என்று நெளிய வைத்துவிடுகின்றன.
சில குறைகளைத் தாண்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்வெல் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் குதுகலிக்க வைக்கும் படம் இது. எனினும் பிரம்மாண்டம், சாகசங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் காதலின் வலி, பிரிவின் ஏக்கம் ஆகியவற்றை நுணுக்கமாக பேச முயன்ற வகையில் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதையும் கடந்து ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ தனித்து நிற்கிறது.