ஹாலிவுட்

6 நாளில் ரூ.10,900 கோடி வசூல் குவித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’

இந்தியாவில் ரூ.362 கோடி

நிலா

டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ படத்துக்குப் பிறகு பீட்டர் பார்க்கரின் புதிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ஜூலை 30-ம் தேதி வெளியானது.

முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் அதிக வசூலைக் குவிக்கத் தொடங்கிய இந்தப் படம் இந்தியாவிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் வெளியான 6 நாட்களில், உலகளவில் ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,900 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இதன்மூலம், சினிமா வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் இந்த வசூலை எட்டிய 2-வது திரைப்படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன் 5 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் கடந்து, முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்பைடர் மேன். வெளியான 6-வது நாளின் முடிவில், மொத்த வசூல் ரூ.362.61 கோடியைக் கடந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் வேகமாக ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹாலிவுட் படங்களில் ஒன்றாக இப் படம் மாறியுள்ளது. இந்தியாவில் ஆங்கிலப் பதிப்புடன், இந்தி,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்திப் பதிப்பின் வசூல் அதிகமாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் தக்கவைத்துள்ளது. அந்தப் படம் இந்தியாவில் சுமார் ரூ.483 கோடி வசூலித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ சுமார் ரூ.438 கோடி வசூலுடன் உள்ளது. இந்நிலையில், ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் தொடர்ந்து வலுவான வசூலைக் குவித்து வருவதால், முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT