ஹாலிவுட்

இந்தியாவில் ‘ஸ்பைடர் மேன்’ புதிய வசூல் சாதனை!

முதல் நாளில் ரூ.73 கோடி வசூல்

ப்ரியா

இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படைத்துள்ளது.

‘ஸ்பைடர் மேன்’ படத்தின் முந்தைய பாகமான 'நோ வே ஹோம்'  வெளியாகி 5 ஆண்டுளுக்கு பிறகு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ இந்தியாவில் நேற்று (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியானது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் வெளியான முதல் நாளில் சுமார் ரூ.73 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் வெளியான முதல் நாளில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’  பெற்றுள்ளது.

இதற்கு  முன்பு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்திடம் இந்த சாதனை இருந்தது. இந்தியாவில் வெளியான முதல் நாளில் அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இந்தியாவில் ஸ்பைடர் மேனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இதைச் சுட்டிக்காடி சோனி பிக்சர்ஸ் இந்தியா தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிக வசூலுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது.

'நோ வே ஹோம்' படத்தின் இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம் முழுமைக்கும் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) யார் என்பதே மறந்துபோகிறது. தன் காதலி எம்.ஜே மற்றும் உயிர் நண்பன் நெட் ஆகியோரின் உயிரைப் பாதுகாக்க, தனது அடையாளத்தை தியாகம் செய்த பீட்டர் பார்க்கர், தற்போது நியூயார்க் நகரின் சிறிய வாடகை வீட்டில் முற்றிலும் தனிமையில் வாழ்கிறார்.

தன் தனிமையையும் துயரத்தையும் மறக்க ஸ்பைடர் மேனாக ஓய்வில்லாமல் உழைக்கிறார். இந்தச் சூழலில், நியூயார்க் நகரில் திடீரென ஏற்படும் ஒருவிதமான அமானுஷ்ய மாற்றங்கள் பொது மக்களை வன்முறையாளர்களாக மாற்ற. 'டேமேஜ் கன்ட்ரோல்' என்ற அமைப்பின் தலைமையகத்தில் மறைக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றை வேட்டையாடத் துடிக்கும் அந்தப் புலப்படாத சக்தியைத் தடுக்கப் புறப்படும் பீட்டர், அதை செய்து முடித்தாரா என்பதை சொல்கிறது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.

SCROLL FOR NEXT