ஹாலிவுட்

ஆஸ்கர் வரலாற்றில் முதல்முறை: 16 பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ‘சின்னர்ஸ்’

ப்ரியா

ஆஸ்கர் விருதுகளின் 98 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத சாதனையை 'சின்னர்ஸ்'  திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.

இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில், இந்தப் படம் மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 'ஆல் அபௌட் ஈவ்' (1950), 'டைட்டானிக்' (1997) மற்றும் 'லா லா லேண்ட்' (2016) ஆகிய படங்கள் தலா 14 பரிந்துரைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.

          

மைக்கேல் பி ஜோர்டான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படம், 1930-களில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நிலவிய இனவெறி பின்னணியில் ரத்தம் குடிக்கும் டிராகுலாவை மையப்படுத்தி வெளியானது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிடுகிறது. 

மேலும், இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ரூத் இ. கார்ட்டர், ஆஸ்கார் வரலாற்றில் அதிக பரிந்துரைகளைப் பெற்ற கறுப்பினப் பெண் (5 முறை) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒளிப்பதிவாளர் ஆட்டம் டூரால்ட் ஆர்க்காபாவ், சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட நான்காவது பெண்மணி ஆவார்.

சின்னர்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘மார்ட்டி சுப்ரீம்’, ‘சென்டிமென்டல் வேல்யூ’ மற்றும் ‘ஃப்ராங்கன்ஸ்டைன்’ ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.

நடிகர்களில் திமோதி சாலமே (மார்ட்டி சுப்ரீம்), ஜெஸ்ஸி பக்லி (ஹேம்நெட்) மற்றும் வாக்னர் மவுரா (தி சீக்ரெட் ஏஜென்ட்) ஆகியோர் முக்கியப் பிரிவுகளில் முன்னிலையில் உள்ளனர். வாக்னர் மவுரா, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

‘சின்னர்ஸ்’ பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகள்:

  • சிறந்த திரைப்படம் 

  • சிறந்த இயக்குனர் - ரையான் கூக்ளர் 

  • சிறந்த நடிகர் - மைக்கேல் பி ஜோர்டான் 

  • சிறந்த துணை நடிகர் - டெலராய் லிண்டோ 

  • சிறந்த துணை நடிகை - ஹெய்லி ஸ்டெய்ன்பீல்ட் 

  • சிறந்த அசல் திரைக்கதை 

  • சிறந்த ஒளிப்பதிவு - ஆட்டம் டூரால்ட் ஆர்க்காபாவ்

  • சிறந்த படத்தொகுப்பு 

  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு 

  • சிறந்த ஆடை வடிவமைப்பு - ரூத் இ. கார்ட்டர் 

  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் 

  • சிறந்த பின்னணி இசை - லுட்விக் கோரன்சன் 

  • சிறந்த அசல் பாடல் 

  • சிறந்த ஒலி அமைப்பு 

  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் 

  • சிறந்த நடிகர் (இரட்டை வேடம்)

SCROLL FOR NEXT