ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கடந்த மார்ச் 15-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரஷ்யாவைச் சேர்ந்த டேவிட் போரன்ஸ்டீன் மற்றும் பாஷா தலன்கின் இயக்கிய ‘மிஸ்டர். நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. விருதைப் பெற்ற பாவெல் தலன்கின் கடந்த புதன்கிழமை நியூயார்க்கில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் செல்வதற்காக ஜே.எஃப்.கே விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் ஆஸ்கர் விருது சிலை இருந்தது.
லுஃப்தான்சா விமான அதிகாரிகள், 3.8 கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை அவருடன் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர். அதை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என கருதுவதாகத் தெரிவித்தார்களாம். பின்னர் விமானத்தின் காக்பிட்டில் ஆஸ்கர் விருதை வைக்கும் யோசனை, லுஃப்தான்சா அதிகாரியால் நிராகரிக்கப் பட்டது. பின்னர் அதை ஒரு பெட்டியில் வைத்து சரக்குப் பிரிவில் அனுப்புமாறு தலன்கினை வற்புறுத்தினர். வேறு வழியின்றி சம்மதித்தார். ஆனால், பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவர் இறங்கியபோது, அந்தப் பெட்டி வரவில்லை.
தலன்கின் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி லுஃப்தான்சா நிறுவனத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையானது.
‘‘சுமார் 10 முறைக்கு மேல் இந்த விருதுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது இதை ஆயுதமாக கருதுவது வியப்பாக இருக்கிறது” என்றார் பாவெல் தலன்கின்.
இந்நிலையில் அவருடைய ஆஸ்கர் விருதுச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லுஃப்தான்சா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. “காணாமல் போன ஆஸ்கர் விருது சிலை பிராங்பர்ட்டில் எங்கள் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறது. உரியவரிடம் விரைந்து ஒப்படைக்க அவரோடு பேசி வருகிறோம். இந்தத் தவறுக்காகவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் கொள்கைகளை எதிர்த்து, அந்நாட்டைவிட்டு வெளியேறி தஞ்சம் புகுந்தவர் பாஷா தலன்கின். உக்ரைன் போருக்கு ஆதரவான பாடத் திட்டங்களை மாணவர்களுக்குப் போதிக்க மறுத்ததால், இவர் தனது ஆசிரியர் பணியை இழந்தார். இவரது போராட்ட வாழ்வை விளக்கும் விதமாகவே ‘மிஸ்டர். நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்’ என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.