ஹாலிவுட்டின் பழமையான ஸ்டூடியோக்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை பாரமவுண்ட் நிறுவனம் 110 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் 12 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அதாவது “இந்த இணைப்பு, ஆரோக்கியமான சந்தை போட்டியைப் பாதிக்கும்; கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும்; நுகர்வோருக்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரத்தைக் குறைக்கும்” என்று கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் பொன்டா தலைமையில் 12 மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வர, சில மாதங்கள் ஆகும் என்பதால், அதுவரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க பாரமவுண்ட் நிறுவனத்திடம் அந்த 12 மாகாண அரசுகளும் கோரிக்கை வைத்தன. அதை ஏற்கவில்லை என்றால் அதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவோம் என்றும் கூறின.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முழுமையாக நடை பெறும் வகையில், அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி வரை அல்லது வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த ஒப்பந்தத்தை முடிக்க மாட்டோம் என்று பாரமவுண்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு செப்.30-க்குள் ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், வார்னர் பிரதர்ஸ் பங்குதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் டாலர் வீதம் அபாரம் செலுத்த வேண்டிய கட்டாயம் பாரமவுண்டுக்கு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் வரை வழக்கு நீடித்தால் அது பாரமவுண்டுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த இணைப்புக்கு எதிராக டைரட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் வேலை வாய்ப்புகள், படைப்பாளிகளுக்கான வாய்ப்புகள் குறையக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளன.