பிரெண்டா ஃபிரிக்கர்

 
ஹாலிவுட்

ஆஸ்கார் விருது வென்ற முதல் ஐரிஷ் நடிகை பிரெண்டா ஃபிரிக்கர் காலமானார்

ப்ரியா

டப்ளின்: புகழ்பெற்ற அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃபிரிக்கர், டப்ளினில் காலமானார். அவருக்கு வயது 81

'மை லெஃப்ட் ஃபுட்', 'ஹோம் அலோன் 2: லாஸ்ட் இன் நியூயார்க்' மற்றும் பிபிசியின் புகழ்பெற்ற 'கேஷுவாலிட்டி' டிவி தொடர் ஆகியவற்றின் மூலம் உலகளவில் அறியப்பட்ட புகழ்பெற்ற அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃபிரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அயர்லாந்து திரையுலக வரலாற்றில் ஆஸ்கார் விருது வென்ற முதல் ஐரிஷ் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றவர்.

பிரெண்டா ஃபிரிக்கரின் மறைவை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய பிரெண்டா, 1977-ல் 'கொரோனேஷன் ஸ்ட்ரீட்' மற்றும் 1978-ல் டேவிட் ஹேரின் 'லிக் கிங் ஹிட்லர்' ஆகியவற்றில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து 1986-ஆம் ஆண்டு பிபிசியின் டிவி தொடரான 'கேஷுவாலிட்டி'-யின் முதல் எபிசோடில் செவிலியர் மேகன் ரோச்சாக அறிமுகமாகி, 2010 வரை அதில் அவ்வப்போது தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக மாறினார்.

அவரது திரையுலகப் பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தது 1990-ஆம் ஆண்டு வெளியான 'மை லெஃப்ட் ஃபுட்' திரைப்படமாகும். இதில் நடிகர் டேனியல் டே-லூயிஸின் தாயாராக நடித்ததற்காக, ஜூலியா ராபர்ட்ஸ் மற்றும் அஞ்சலிகா ஹூஸ்டன் போன்ற முன்னணி நடிகைகளைப் பின்னுக்குத் தள்ளி, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்தார்.

மேலும், 1992-ல் வெளியான 'ஹோம் அலோன் 2' திரைப்படத்தில் மெக்காலே கல்கினுடன் இணைந்து அவர் நடித்த Pigeon Lady கதாபாத்திரம், இன்று வரை மறக்க முடியாததாக திகழ்கிறது. பல தசாப்தங்களாக தனது நடிப்பால் திரையுலகை ஆக்கிரமித்த பிரெண்டா ஃபிரிக்கரின் மறைவு, சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT