அனிமேஷன், திரை அனுபவம் எல்லா வகையிலும் அமெச்சூர்த்தனத்துடன் மிகவும் மோசம் என விமர்சிக்கப்பட்ட ஒரு படம், ‘தி ஒடிசி’, ‘ஸ்பைடர் மேன்’ வசூலை பின்னுக்குத் தள்ளி சீனாவில் சாதனை படைத்து வருகிறது.
படம் எவ்வளவு மோசமாக உள்ளது எனப் பார்ப்பதற்காக மக்கள் திரையரங்குக்கு செல்கின்றனர். ‘நியு லை’ (Niu Lai) என்கிற அந்த 84 நிமிட சீன மொழிப் படம், ஒரு கன்றுக்குட்டிக்கும் வானம்பாடி பறவைக்கும் இடையில் உருவாகும் ஒரு கனவுப் பயணத்தை பற்றிக் கூறுகிறது.
ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், அதன் முதல் பத்து நாளில் 7,700 யுவான் (இந்திய மதிப்புக்கு ரூ.1.04 லட்சம்) மட்டுமே வசூல் செய்திருந்தது. ட்ரெய்லரோ, விளம்பரங்களோ இல்லாமல் வெளியான இந்தப் படத்தை நாடு முழுவதும் சுமார் 300-க்கும் குறைவானவர்களே அதுவரை பார்த்திருந்தனர். பிறகுதான் அந்த ட்விஸ்ட் நடந்தது.
அந்தப் படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், பார்வையாளர்கள் படத்தின் மோசமான கிராஃபிக்ஸ், இயல்புக்கு மாறான கதாபாத்திரங்கள், அதற்கான குரல், குழப்பமான கதை என ஒட்டு மொத்த படத்தையும் கேலி செய்திருந்தனர்.
சிலர் படத்தை மாணவர் ப்ராஜெக்ட்களுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர். மற்றவர்கள் 2026-ம் ஆண்டின் மோசமான படம் என்றும் விமர்சித்திருந்தனர்.
இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தை ஒரு மீம் கன்டென்ட்டாக மாற்ற, படம் குறித்த ஆர்வம் மக்களிடம் தொற்றிக் கொண்டது. விளைவு, அப்படி என்ன மோசமான படம் இது என்று பார்க்க மக்கள் திரையரங்குக்கு படையெடுக்கின்றனர்.
இதன் காரணமாக படம் தற்போது 14.9 மில்லியன் யுவான், இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக சீனாவின் சினிமா டிக்கெட் விற்பனை தளம் தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத விளம்பரத்தால், வசூலில் ‘தி ஒடிசி’, ஸ்பைடர் மேன்’ படங்களை அங்கு ‘நியு லை’ படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தப் படத்தை தாயும் மகனும் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கியதாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பு, எழுத்து, இயக்கம், குரல் என அனைத்தையும் அந்த இருவர் குழுவே செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ‘நியு லை’ படத்தின் மோசமான அனிமேஷனை எல்லா பார்வையாளர்களும் விமர்சிக்கவில்லை. துல்லியமான காட்சிகளை நொடிப் பொழுதில் உருவாக்கும் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தில், கைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தை தந்தாக சிலர் பாராட்டவும் செய்கின்றனர்.