பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஓபன்ஹெய்மர்’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘தி ஒடிஸி’.
ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ‘தி ஒடிஸி’யை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. முதன்முறையாக, முழு திரைப்படமும் ஐமேக்ஸ் கேமராவால் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில், மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா, லூபிடா நியாங்கோ, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 17-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் பற்றி கிறிஸ்டோபர் நோலன் கூறும்போது, “ஒரு புகழ்பெற்ற கதையைத் திரையில் கொண்டு வரும்போது மிகப்பெரிய பொறுப்புணர்வு ஏற்படுகிறது. மக்கள் நேர்மையான மற்றும் வலிமையான படைப்பையே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக ஒரு படைப்பாளி எவ்வளவு தூரம் மெனக்கெடுகிறார் என்பதுதான் முக்கியம். ‘திடார்க் நைட்’ வரிசைப் படங்களில் நான் கற்றுக் கொண்ட பாடம் இது.
புராண காலத்து அரக்கர்களையும், அதிசய உயிரினங்களையும் ஹாலிவுட் படங்களில் உயிர்ப்பித்த ரே ஹாரிஹவுசன் போன்ற மேதைகளின் படங்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு, அதே போன்ற பிரம்மாண்டமான புராணக் கதையை நவீன தொழில்நுட்பத்துடன் சொல்ல வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. அது இதில் நிறைவேறியிருக்கிறது. ‘ஓபன்ஹெய்மர்’ படத்தின் நீளத்தை விட இது குறைவுதான் ” என்றார்.