நடிகர் ஆண்டி கார்சியா
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்டி கார்சியா, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘டைமண்ட்’.
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான பில் முர்ரே, டஸ்டின் ஹாஃப்மேன், விக்கி க்ரிப்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2005-ல் வெளியான ‘தி லாஸ்ட் சிட்டி’ படத்துக்குப் பிறகு, ஆண்டி கார்சியா இயக்கியுள்ள படம் இது. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுபற்றி பேசிய ஆண்டி கார்சியா, இக்கதை உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஸியமான தகவலைச் சொன்னார். கடந்த 2005-ம் ஆண்டு, கார்சியாவின் மகள், தனது பள்ளி வீட்டுப் பாடத்துக்காகக் குற்றப் பின்னணி கொண்ட கதையை எழுதத் தொடங்கினார். அதற்கு மேல் அவரால் தொடர முடியவில்லை. மகளுக்கு உதவ நினைத்த ஆண்டி கார்சியா, ‘ஜோ டைமண்ட்’ என்ற துப்பறியும் கதாபாத்திரத்தையும், அதற்கான சில காட்சிகளையும் எழுதிக் கொடுத்தார். மகள் வீட்டுப்பாடத்தை முடித்துச் சமர்ப்பித்தார்.
ஆனால், ஆண்டி கார்சியாவால் அந்த ஜோ டைமண்ட் கதா பாத்திரத்தை மறக்க முடியவில்லை. 20 ஆண்டுகளாக, அந்தத் துப்பறியும் கதாபாத்திரத்தை மனதுக்குள் வைத்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதை சினிமாவுக்கான கதையாக மெருகேற்றினார். பின்னர் அது படமாக்கப்பட்டு இப்போது கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடத் தேர்வானது குறித்து கார்சியா கூறும்போது, “இந்தப்படம் எனது சொந்தக் குழந்தையைப் போன்றது. இதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.