துப்பாக்கியின் துணையுடன் குற்ற சாம்ராஜ்யத்தின் உச்சத்தை அடைந்த ஒருவன், அதே துப்பாக்கிக் குண்டுக்கு வீழ்வதே ‘லிட்டில் சீசர்’ (LITTLE CAESAR -1931) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
நள்ளிரவில் எரிவாயு நிலையத்தில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பும் நண்பர்களான சீசர் என்ரிகோ பண்டெல்லோ (ரிகோ), ஜோ மஸாரா இருவரும் ஓர் உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். நாளிதழில் தாதா பீட் மொன்டானாவின் ஆடம்பர விருந்து செய்தியைப் பார்க்கும் ரிகோவுக்குத் தானும் பெரிய தாதா ஆக வேண்டும் என்ற அதிகார வெறி பிறக்கிறது; நடனக் கலைஞனான ஜோ எளிய, நிம்மதியான வாழ்க்கையை விரும்புகிறான். இரு வேறு இலக்குகளோடு இருவரும் குற்ற சாம்ராஜ்யமான கிழக்கு நகருக்குப் பயணிக்கிறார்கள்.
அங்கு சாம் வெட்டோரியின் கும்பலில் சேரும் ரிகோவின் துணிச்சலையும் குட்டையான தோற்றத்தையும் கண்டு அவனுக்கு ‘லிட்டில் சீசர்’ எனப் பெயரிடுகிறார்கள்.
அதேவேளையில், ஜோ ஒரு கிளப்பில் ஓல்கா என்ற பெண்ணுடன் நடனமாடி, அவளது காதலில் விழுகிறான். நகரத்தின் தலைமைத் தாதா ‘பிக் பாய்’, தன் தளபதி பீட் மொன்டானா மூலம் உள்ளூர் தாதாக்களான வெட்டோரி மற்றும் லிட்டில் ஆர்னிக்கு, “புதிய குற்றத் தடுப்பு ஆணையர் மெக்ளூர் கடுமையாக நடந்துகொள்வதால் சில மாதங்களுக்குத் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கக் கூடாது” என்று எச்சரிக்கை விடுக்கிறார். ஆனால் அதை மதிக்காமல், புத்தாண்டு நள்ளிரவில் எதிரி தாதா ஆர்னியின் கிளப்பில் கொள்ளையடிக்கும் ரிகோ, குறுக்கே வரும் ஆணையர் மெக்ளூரைச் சுட்டுக் கொல்கிறான்.
ஆணையர் கொல்லப்பட்டதால் காவல்துறை வெகுண்டெழுகிறது. புலனாய்வு அதிகாரி ஃப்ளஹெர்ட்டி, தாதாக்களின் கிளப்பைச் சுற்றி வளைக்கிறார். ரிகோவின் செயலை வெட்டோரி கண்டிக்க, அவனை ஓரங்கட்டிவிட்டுக் கும்பலின் தலைவனாகிறான் ரிகோ. சக அடியாட்கள் வைரமும் பிளாட்டினமும் பதித்த கைக்கடிகாரத்தைப் பரிசளிக்க, புதிய தலைவனான ரிகோ ஆணவத்தோடு போஸ் கொடுக்கிறான். தன்னைக் கொல்ல ஆட்களை ஏவிய எதிரி தாதா ஆர்னியின் அலுவலகத்துக்கே சென்று, துப்பாக்கி முனையில் மிரட்டி அவனை ஊரை விட்டே விரட்டுகிறான்.
ரிகோவின் அசுர ஆதிக்கத்தைக் கண்ட பிக் பாய், எந்த பீட் மொன்டானாவின் விருந்துச் செய்தியைப் பார்த்து அவன் தாதா ஆக ஆசைப்பட்டானோ, அவனிடம் இருந்த வடக்குப் பகுதியின் முழு அதிகாரத்தையும் ரிகோவிடமே தருகிறார். சாதாரண தெருவோரக் கொள்ளையனாகத் தொடங்கியவன்
மாளிகை, பகட்டான உடைகள், கைநிறைய அடியாட்கள் என நிழல் உலக சாம்ராஜ்யத்தின் உச்சத்தைத் தொடுகிறான். இந்தச் சூழலில் தன் பழைய நண்பன் ஜோ தன்னுடன் இருக்க வேண்டும் என ரிகோ வற்புறுத்துகிறான். ஜோ மறுத்து, இதைத் தன் காதலி ஓல்காவிடம் தெரிவிக்க, “ரிகோ இருக்கும் வரை நமக்கு நிம்மதி இல்லை” என்று துணிந்து காவல் அதிகாரி ஃப்ளஹெர்ட்டிக்கு ரகசியத் தகவல் தருகிறாள் அவள்.
ஆத்திரத்துடன் ஜோவைச் சுடத் துப்பாக்கியை நீட்டும் ரிகோவின் விரல்கள் நண்பன் மீதான பாசத்தால் நடுங்குகின்றன; அவனால் சுட முடிவதில்லை. அதற்குள் போலீஸ் சுற்றி வளைக்கிறது. தாதா கும்பல் அழிய, ரிகோ மட்டும் தப்பியோடி அனாதையாகப் பதுங்குகிறான்.
மாதங்கள் கடக்க, “ரிகோ ஒரு கோழை; பயந்துபோய்ச் சாக்கடையில் ஒளிந்து கொண்டான்” என்று பத்திரிகைகளில் சவால் விடுகிறார் அதிகாரி ஃப்ளஹெர்ட்டி. இது தனக்கான வலை என்பதை உணராமல் ஆத்திரத்தில் பொதுத் தொலைபேசியிலிருந்து மிரட்டும் ரிகோவை அந்த அழைப்பை வைத்தே போலீஸ் சுற்றி வளைத்து சுடுகிறது. மரப்பலகை விளம்பரத்துக்குப் பின்னால் மறைந்து சுடும் ரிகோ, மெஷின் கன் குண்டுகளால் துளைக்கப்பட்டுத் தரையில் சரிகிறான்.
அந்தப் பலகையில், நண்பன் ஜோவும் அவனது காதலி ஓல்காவும் சந்தோஷமாக நடனமாடும் படம்தான் விளம்பரமாக இருக்கிறது.
நிழல் உலகையே ஆள நினைத்த அந்த தாதா, “கருணை மிகுந்த அன்னையே, இதுதானா ரிகோவின் முடிவு?” என்று முனகியவாறே பரிதாபமாகத் தன் உயிரை விடுகிறான். தான் தேர்ந்தெடுத்த வன்முறை வாழ்க்கையால் ரிகோ மரணத்தைத் தழுவுகிறான்; அவன் நண்பன் ஜோவோ, நடனக் கலைஞனாகத் தனது கனவை அடைகிறான். இருவரின் வாழ்க்கைப் பாதைகளையும் ஒரே விளம்பரப் பலகையில் மோதவிட்டு, லிட்டில் சீசர் (1931) படத்தின் கதை முடிகிறது.
1930-களின் தொடக்கத்தில் உருவான குற்றப்படங்கள் வன்முறையைப் பெருமைப்படுத்துகின்றன என்ற விமர்சனம் எழுந்ததால், “இப்படம் குற்றவாளிகளை நாயகர்களாகக் காட்டவில்லை; அவர்களின் அழிவைச் சமூகத்துக்கான எச்சரிக்கையாகவே காட்டுகிறது” என்பதை உணர்த்த தயாரிப்பாளர்கள் படத்தின் தொடக்கத்திலேயே, ‘‘...வாள் எடுக்கிற எவனும் வாளாலேயே மடிவான்” என்ற விவிலிய நற்செய்தி வாசகத்தை (மத்தேயு 26:52) வைத்தனர்.
டபிள்யூ. ஆர். பர்னெட்டின் நாவலைத் தழுவி ராபர்ட் என். லீ காட்சி வடிவமாக்க, குற்றவாளிகளின் வாழ்வியலை சமரசமின்றித் திரைக்கதையாக்கினார் பிரான்சிஸ் எட்வர்ட்ஸ் ஃபாராகோ. மவுனப் பட பாணியைத் துறந்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குநர் மெர்வின் லீராய், குற்ற உலகின் அசல் குரூரத்தைத் தத்ரூபமாகப் பதிவுசெய்து, ஆரம்பகாலக் கிளாசிக் கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கு முன்னோடியாக இப்படத்தை நிலைநிறுத்தினார்.
ஒளிப்பதிவு (டோனி கவுடியோ): இருண்ட சந்துகள், மங்கிய விளக்குகள் வழியே நிழல் உலகைப் பதிவுசெய்ததுடன், நிஜத்தில் உயரம் குறைவான எட்வர்ட் ஜி. ராபின்சனைத் தனது கேமரா கோணங்கள் மூலம் நிழல் உலகையே அச்சுறுத்தும் கம்பீரமான ஆளுமையாகக் காட்டி வியக்க வைக்கிறார்.
படத்தொகுப்பு (ரே கர்டிஸ்): காட்சிகளின் ஓட்டத்தையும் கதையின் வேகத்தையும் நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி, கொள்ளை, துரத்தல், மோதல் போன்ற சம்பவங்களில் பதற்றத்தைத் தொய்வின்றித் தக்கவைக்கிறார்.
எட்வர்ட் ஜி. ராபின்சன்: உயரம் குறைந்த உருவம், அகன்ற முகம், சிறிய கொள்ளையனாக இருந்து படிப்படியாக அதிகாரத்தின் உச்சிக்கு ஏறும்போது உடையில், நடையில், பார்வையிலேயே அதிகாரத்தைக் காட்டிய விதம் சிறப்பு. நண்பன் ஜோவைச் சுட முடியாமல் தவிக்கும்போதும் தங்கும் விடுதியில் செய்தித்தாளில் ஒருவர் தன்னைப் பற்றி வாசிக்கும் செய்திக்கேற்ப முகத்தைச் சுருக்கி, விரித்து, உதடுகள் துடித்து, கோபம் தலைக்கேறும் நடிப்பின் பரிமாணத்தில் எம்.ஆர்.ராதாவை ஞாபகப்படுத்துகிறார்.
டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் ஜூனியர்: ஜோ மஸாராவாக நண்பனின் ஆதிக்கத்துக்கும், காதலியின் நிம்மதியான வாழ்க்கை தேடலுக்கும் நடுவே தவிக்கும் ஒரு கலைஞனின் போராட் டத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிளெண்டா ஃபாரெல்: நடனப் பெண் ஓல்காவாகக் காதலனைக் குற்ற சாம்ராஜ்யத்திலிருந்து மீட்கத் துடிக்கும் பாசத்தையும் அசாத்தியத் துணிச்சலையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
வரலாற்று சீசரை அவனது நண்பன் புரூட்டஸின் கத்தி வீழ்த்தியது போல, லிட்டில் சீசரை அவனது உயிர்த்தோழன் ஜோ மஸாராவின் மீதான பாசமும் பிளவுமே வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. திரைப்பட வரலாற்றில், முழுமையான வடிவத்தைப் பெற்ற ஆரம்பகால கேங்க்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக ‘லிட்டில் சீசர்’ இன்றும் நிலைத்து நிற்கிறது. எளிய மனிதன் வன்முறையால் சாம்ராஜ்யம் அமைத்தாலும் அந்த வன்முறையேஅவனை அழித்து விடும் என்ற வாழ்வியல் உண்மையை உணர்த்தும் இத்திரைப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து கண்டு களிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)