புகழ்பெற்ற பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்டோட் (91), வயது முதிர்வு காரணமாகக் காலமானார்.
பிரெஞ்சில் வெளியான, மனினா, த கேர்ள் இன் த பிகினி (1952), நாட்டி கேர்ள் (1956), அண்ட் காட் கிரியேட்டட் வுமன் (1956), த பரிசியன் (1957), கம் டான்ஸ் வித் மி (1959) உள்பட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரிஜிட் பார்டோட். 1956-ல் வெளியான ‘அண்ட் காட் கிரியேட்டட் வுமன்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்.
அவருடைய அப்போதைய கணவர் ரோஜர் வாடிம் இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அவர் நிர்வாணமாக நடனமாடும் காட்சி, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 1950-களில் பிற்பகுதியில் மேற்கத்திய நாடுகளில் நடந்த பாலியல் சுதந்திரத்துக்கான இயக்கத்தின் அடையாளமாக இவர் திகழ்ந்தார். தனது 39-வது வயதிலேயே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தீவிர விலங்குகள் நல ஆர்வலர் ஆனார்.
இன வெறியைத் தூண்டியதற்காகப் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டு சர்ச்சைகளிலும் சிக்கிய பிரிஜிட் பார்டோட், தெற்கு பிரான்சில் உள்ள செயின்ட் - ட்ரோபஸ் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.