புதுப்பிக்கப்பட்ட டிசி தயாரிப்புகளில் ‘சூப்பர்மேன்’, ‘சூப்பர்கேர்ள்’ வரிசையில் வெளியாகியுள்ள படம் ‘க்ளேஃபேஸ்’. பேட்மேன் கதைகளின் பிரபல வில்லனான க்ளேஃபேஸ் கதாபாத்திரத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை, 2022-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பீக் நோ ஈவில்' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கியுள்ளார். ‘பாடி ஹாரர்’ ஜானரில் உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
ஹாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் மேட் ஹேகன் (டாம் ரைஸ் ஹாரிஸ்). ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின் போது, ஆஸ்கர் விருதுக்கான சிறந்த நடிகர் பரிந்துரையில் தன் பெயர் இடம்பெற்றிருப்பதை தன் நெருங்கிய நண்பனும் நடிகருமான கோரியுடன் (ஜோஷுவா ஜேம்ஸ்) சேர்ந்து கேட்டு மகிழ்கிறார்.
வெற்றி அலையில் மிதக்கும் மேட், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோதம் நகரத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு இரவு விடுதியில் நடக்கும் விருந்தின் போது, மீயா (ஜோனா ரிபேரோ) என்ற மாடல் அழகி மேட்டை அணுகுகிறார். அவர் கோதம் நகரத்தின் மிகப்பெரிய கேங்க்ஸ்டரின் காதலி. ஆனால், அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் மேட் அவருடன் இரவைக் கழிக்கிறார்.
மறுநாள் காலையில் கண் விழிக்கும் மேட்டிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது படுக்கைக்கு அருகே கேங்க்ஸ்டர் ஸாபோவும் அவரது ஆட்களும் கத்தியோடு நிற்கிறார்கள். மேட்டின் முகத்தை கத்தியால் கொடூரமாக வெட்டிச் சிதைக்கிறார்கள். அழகுதான் தனது அடையாளம் என்று வாழ்ந்த அவருக்கு வாழ்வே தலைகீழாக மாறுகிறது. அவனது முகத்தைக் கண்டு அருவருப்படையும் சமூகத்தைச் சந்திக்க முடியாமல், தனது பணம், புகழை இழக்கும் மேட் பாழடைந்த ஒரு சிறிய அறைக்குள் முடங்குகிறார்.
தன் முகத்தை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியாமல் தவிக்கும் மேட், மருத்துவர் கெய்ட்லின் காரிடம் (நாவோமி அக்கி) சென்று கெஞ்சுகிறார். இன்னும் அரசின் அனுமதி கிடைக்காத அந்த ஆராய்ச்சியை மேட் மீது பரிசோதிக்கிறார் அந்த மருத்துவர்.
தொடக்கத்தில் அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவரது பழைய முகம் திரும்புவது போலத் தோன்றினாலும், மேட் செய்த ஓர் அவசரக் குளறுபடியால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அவரது உடல் களிமண் போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறத் தொடங்குகிறது. இதன் பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும் சிலசமயம் அருவருப்பாகவும் சொல்கிறது ‘க்ளேஃபேஸ்’.
‘கேரி’ மற்றும் ‘தி எக்ஸார்சிஸ்ட்: மார்டிர்ஸ்’ போன்ற குறுந்தொடர்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தை மைக்கேல் ஃபிளனகன் இயக்க முடியாமல் போனாலும், அவரே இப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
படம் முழுவதும் இருக்கையின் நுனிக்கே நம்மை வரவழைக்கும் பாடி ஹாரர் காட்சிகளும் ரத்தக் களறியும் நிறைந்திருக்கின்றன. கடைசியாக இதுபோன்ற காட்சிகள் ‘சப்ஸ்டேன்ஸ்’ படத்தில் இடம்பெற்றிருந்தன. பழிவாங்கும் கதைக் களம் வழக்கமானதுதான் என்றாலும், மனிதநேயமும் இரக்கமும் அற்ற ஓர் உலகத்தை படம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நம் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேட் தொடக்கத்திலிருந்தே வில்லன் அல்ல. சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன். அவனது தனிமையும் இயலாமையுமே அவனை இந்த எல்லைக்குத் தள்ளுகின்றன என்பதை மிக ஆழமாக பார்வையாளர்களுக்கு கடத்தியதில் இயக்குநர் வெற்றி பெறுகிறார்.
'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு, ஒரு பேட்மேன் வில்லனின் கொடூரமான செயல்களுக்குப் பின்னால் இருக்கும் சோகமான கடந்த காலத்தைத் காட்டும் மற்றொரு மிகச்சிறந்த திரைப்படமாக ‘க்ளேஃபேஸ்’ வந்துள்ளது. முதல் பாதி விறுவிறுப்பாகவும், அதிர்ச்சியளிக்கும் திருப்பங்களோடும், கச்சிதமான வேகத்திலும் நகர்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் மேட் அடுத்து யார் போல உருமாறுவார் என்பதை பார்வையாளர்களால் எளிதில் ஊகிக்க முடிகிறது. மேட்டின் பழிவாங்கும் படலம் சற்றே பழைய பாணியிலானதாக மாறுவதால், இரண்டாம் பாதியின் வேகம் குறைகிறது. இருப்பினும், க்ளைமாக்ஸுக்கு முன்னால் படம் மீண்டும் வேகத்தை மீட்டெடுத்து, படம் முடிந்த பிறகும் நம் மனதில் பல கேள்விகளை எழுப்பும் வகையில் நிறைவடைகிறது.
தொழில்நுட்பம், நடிப்பு ரீதியாக இப்படம் ஒரு கலைப் படைப்பாக மிளிர்கிறது. நடிகர் டாம் ரைஸ் ஹாரிஸ், மேட் கதாபாத்திரத்தின் வலி, கோபம், தனிமை மற்றும் ஏக்கம் ஆகியவற்றைத் தனது கண்கள் மூலமாகவே கடத்தி அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் ஜாலங்களுக்குப் பின்னால் அவரது நடிப்பு மறைந்துவிடாமல் தனித்து நிற்கிறது. முகத்தை கத்தியில் குத்தி கிழிப்பது, ஒட்டியிருக்கும் கண் இமைகளை கத்திரிக்கோலால் வெட்டி எடுப்பது என முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் காட்சிகள் படம் முழுக்க உள்ளன. சிலசமயம் அவை ஓவர் டோஸ் ஆகி அருவருப்பான உணர்வுகளையும் தருகின்றன.
மேக்கப்பா, கிராபிக்ஸா என்று தெரியாத அளவுக்கு நேர்த்தியான வகையில் படமாக்கப்பட்ட காட்சிகள் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஈர்க்கின்றன.
பொதுவாக சூப்பர் ஹீரோ அல்லது சூப்பர்வில்லன் திரைப்படங்கள் ஒரே பாணியிலான ஆக்ஷன் சார்ந்த கதைகளாக வெளிவரும் சூழலில், ஒரு மனிதனின் சோகமான வீழ்ச்சியையும் அவனது இயலாமையையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ‘க்ளேஃபேஸ்’. கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம். திரையரங்குகளில் தமிழிலும் வெளியாகியுள்ளது.