திரைத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இதில், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 98-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில், இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கேனான் ஓ பிரையன் தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் திரை பிரபலங்களுடன் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைக்கலைஞர்கள், இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’, ‘சின்னர்ஸ்’ ஆகிய படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ‘சின்னர்ஸ்’ 16 பிரிவுகளிலும் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ 13 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருந்தன.
இதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (பால் தாமஸ் ஆண்டர்சன்), சிறந்த துணை நடிகர் (சீன் பென்), சிறந்த தழுவல் திரைக்கதை (பால் தாமஸ் ஆண்டர்சன்), சிறந்த காஸ்டிங் (கஸாண்ட்ரா குலுகண்டிஸ்), சிறந்த படத் தொகுப்பு ஆகிய 6 ஆஸ்கர் விருதுகளை ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படம் அள்ளியது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘சின்னர்ஸ்’ படத்துக்காக மைக்கேல் பி ஜோர்டன் பெற்றார்.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (ரியான் கூக்ளர்), சிறந்த ஒரிஜினல் இசை (லுட்விக் கோரன்சன்), சிறந்த ஒளிப்பதிவு (ஆட்டம் டுரால்ட் ஆர்காபா) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை இப்படம் வென்றது. ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் பெண், ஆட்டம் டுரால்ட் ஆர்காபா என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகை விருதை, ‘ஹாம்னெட்’ படத்தில் நடித்த ஜெஸ்சி பக்லி வென்றார். துணை நடிகை விருதை ‘வெப்பன்ஸ்’ படத்தில் நடித்த எமி மடிகன் பெற்றார். சிறந்த காஸ்ட்யூம் டிசைன் (கேட் ஹாலி), சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் (கேட் ஹாலி), தயாரிப்பு வடிவமைப்பு (தமரா டெவரெல் மற்றும் ஷேன் வியூ) ஆகிய விருதுகளை, ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ படம் வென்றது.
ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை தட்டிச் சென்றது. நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாகத் திகழ்ந்த ‘கேபாப் டெமன் ஹண்டர்ஸ்’ சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதையும் இதில் இடம்பெற்ற ‘கோல்டு’ சிறந்த பாடலுக்கான விருதையும் வென்றது.
சிறந்த ஆவணப்படமாக மிஸ்டர் நோபடி அகைன்ஸ்ட் புதின், சிறந்த ஆவணக்குறும்படமாக, ஆல் த எம்டி ரூம்ஸ், அனிமேஷன் குறும்படமாக, த கேர்ள் ஹு கிரைடு பேர்ள்ஸ், சிறந்த சர்வதேச திரைப்படமாக, சென்டிமென்டல் வேல்யூ (நார்வே) ஆகியவை விருது வென்றன. சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை ஜேவியர் பார்டமுடன் இணைந்து நடிகை பிரியங்கா சோப்ரா வழங்கினார்.