பண்டோரா உலகின் நவி இன மக்களுக்கும், அந்த மக்களுடன் பழகி ஆராய்வதற்காக அனுப்பப்படும் நாயகன், அவர்களுக்காகப் போராடுவதாக ‘அவதார்’ படத்தின் முதல் பாகத்தை முடித்திருப்பார், ஜேம்ஸ் கேமரூன். அதன் தொடர்ச்சியாக வந்திருக்கிறது 2-ம் பாகம். நம்பிக்கைத் துரோகியாகிவிட்ட, ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), அவர் மனைவி நெய்த்ரி(ஜோ சல்டானா) மற்றும் அவர் குழந்தைகளைப் பழிவாங்க பெரும் படைகளுடன் வருகிறார் கர்னல் (ஸ்டீபன் லாங்).
அவர் வருவதை அறிந்து, 'கடல்வாசிகள்' வாழும் தீவில் தஞ்சமடைகிறார்கள் ஜேக் சல்லியும் அவர் குடும்பமும். அங்கும் படைகளுடன் வந்துவிடும் கர்னல், நினைத்தபடி அவர்களைப்பழி வாங்கினாரா, இல்லையா என்பதுதான் கதை.
‘அவதாரி’ல் டெக்னிக்கலாக வியக்கவைத்த கேமரூன் இதிலும் அதே மிரட்டலை ஆச்சரியத்துடன் தொடர்ந்திருக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் அவர்காட்டும் நீல நிற, கிராபிக்ஸ் வனமும்அதைத் தாண்டிய கடல் தீவும் பார்வையாளர்களை, புதிய அனுபவத்துக்கு கைபிடித்து அழைத்துச் செல்லும் விஷூவல் பிரம்மாண்டம். கடலுக்குள் வாழும் வித்தியாசமான உயிரினங்கள், வண்ணங்களாக விரியும் பூக்கள், அலைமோதும் தீவு, அவர்களுக்கான இருப்பிடம் என கடலும் கடல்வாசிகளும் அவர்களுடனேயே நம்மையும் இழுத்து வைத்துக் கொள்ளும் அதிசயம் இந்தப் படத்திலும் நிகழ்கிறது.
ஆனால், குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் தலைவன், அதற்கான மோதல் என சென்டிமென்ட் பாசத்துக்குள் படம் வகையாகச் சிக்கிக் கொண்டதால் அதைத் தாண்டிய எதிர்பார்ப்பை ‘டொப்’பென்று உடைத்துவிடுகிறது, அழுத்தமில்லாத திரைக்கதை. ஆனாலும் சாம் வொர்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கர்ப்பிணியாக வரும் கேத் வின்ஸ்லெட், மகன் லோக், கிரேஸ் அகஸ்டின் மகளாக வரும் கிரி, அவதார் உலகில் மனித உருவத்தில் வாழும் ஸ்பைடர், ஜேக் சாம்பியன்ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களின் வழி, கதைக்கு உயிர்கொடுக்கிறார்கள். அதற்கு ரசஸ் கார்ப்பன்ட்டரின் ஒளிப்பதிவும் சைமன் ஃப்ராங்ளெனின் பின்னணி இசையும் பாஸ்கர் சக்தியின் தமிழ்வசனமும் காட்சிகளின் டீட்டெய்லும் அழகாகக் கைகொடுக்கின்றன.
பத்து வருடத்துக்குப் பிறகு கதை நடப்பதால், முதல் பாகத்தை விட இதில்ஆயுதங்களை நவீனமாக மாற்றிஇருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஜேம்ஸ் கேமருன் மற்றும் அவர் குழுவின்உழைப்பு நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
‘இதுதான் கதை, இப்படித்தான் முடியும்’என்று எளிதாக யூகிக்க முடிவதும் எந்த திருப்பமும் இல்லாமல் கதைநகர்வதும் இரண்டாம் பாதியில் வரும்சென்டிமென்ட் காட்சிகளும் சுவாரஸ்யத்துக்குப் பதில் சோர்வையே தருகின்றன. அதோடு காட்சிகளின் நீளத்தையும் தாராளமாகக் குறைத்திருக்கலாம்.
விஷூவலையும் கிராபிக்ஸையும் நம்பிய கேமரூன், கதையை கொஞ்சம் புதுமையாக யோசித்திருந்தால் படம் ஆரவாரமாகி இருக்கும். இருந்தாலும் குறைகளை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டால், கடல் மற்றும் கடல் சார்ந்த காட்சி அனுபவத்துக்காகவே ‘அவதார் 2’வை ஆழமாக ரசிக்கலாம்.